தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தலைத்தொங்கும் சமூகநீதி பாதைக்கும், பல்வேறு சமூக மாற்றங்களுக்கும் வித்திட்ட தந்தை பெரியாரின் பிறந்தநாள் அன்று அவரை நினைவுக்கூறுவதும், இந்த தலைமுறைக்கும் அவரை கொண்டுசெல்வதும் அவசியமாகும்.
இதை கருத்தில் கொண்டு பெரியாரிய இயக்கங்கள் மட்டுமின்றி பல்வேறு முற்போக்கு இயக்கங்களும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள்.
அந்த வகையில், திராவிடர் கழகம் சார்பில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தொடங்கி பெரியார் இல்லம் வரை பேரணியாக திட்டமிடப்பட்டு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு தடை விதித்ததாக தகவல்கள் பரவின. இத்தனை ஆண்டுகளாக நடந்துவந்த பேரணிக்கு தடையா என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
அன்றைய தினமும் இந்து முன்னணி சார்பில் ஈரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற இருக்கிறது. திராவிடர் கழகம் திட்டமிட்ட வழியில் இல்லாமல், விநாயகர் சிலை ஊர்வலம் வேறு வழித்தடத்தில்தான் மாலையில் நடைபெற இருக்கிறது. இருப்பினும் விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக, செப்டம்பர் 17ஆம் தேதி திராவிடர் கழகத்தின் பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
ஒரே நாளில் விநாயகர் சிலை ஊர்வலமும், பெரியார் பிறந்தநாள் பேரணியும் நடைபெறும்பட்சத்தில், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக ஈரோடு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகம் ஈரோட்டில் அளித்த பேட்டி ஒன்றில், "பெரியார் பிறந்தநாள் அன்று பேரணி செல்வது வழக்கம், பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். விநாயகர் ஊர்வலத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டோம் என துணை ஆய்வாளர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
வேண்டுமென்றால் மேலதிகாரியிடம் முறையிடுங்கள் என தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகளில் எந்த ஆட்சியிலும் பெரியார் பிறந்தநாள் அன்று தடை விதிக்கப்பட்டதில்லை. எனவே, பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறைக்கு அவர் கோரிக்கை வைத்தார்" என்றார்.
மேலும், "சுமார் ஒன்று, ஒன்றரை கி.மீ., தூரம்தான் பேரணி செல்வோம். இது காலையில் நடைபெறும் பேரணி. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மாலை 5 மணிக்கு மேல்தான் நடைபெறும். பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, பெரியார் வீதி, பெரியார் - அண்ணா நினைவு இல்லம் வரை பேரணி செல்வோம்" என தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது X பதிவில், "தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், தவெக அரசின் காவல்துறை அனுமதி மறுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,
குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும்,
இந்த Circus அரசின்…— Udhay (@Udhaystalin) September 14, 2026
பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அவரது X பதிவில் நீண்ட கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
அதில் அவர், "ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தும், பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்தும் அடக்குமுறையைக் கையாண்ட தவெக அரசு, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கும் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பதா? – அரசியலுக்காக பெரியாரை தங்களது கொள்கைத் தலைவர் என தவெக போடும் நாடகம் அம்பலம்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை…— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 14, 2026
இதேபோல், நாளைய தினம் (செப். 15) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேலூர் குடியாதத்தில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. முதலில் பேரணிக்கு போலீசார் அனுமதிக்காத நிலையில், கடும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், ஈரோடு பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் X பக்கத்தில், பெரியாரின் பிறந்தநாள் பேரணிக்கு தடை என்ற பதிவை சுட்டிக்காட்டி இது முற்றிலும் தவறான தகவல் என பதிவிட்டுள்ளது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், “இன்று ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ம் தேதி காலை 10:30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த மனு… https://t.co/Kyoj2koBAx— TN IID (@tn_factcheck) September 14, 2026
மேலும் அதில், "இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், 'இன்று ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வரும் வரும் செப். 17ஆம் தேதி காலை 10:30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த மனு அளித்திருந்தனர்.
காவல் துறையால் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது'. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் காவல்துறை அனுமதி மறுத்ததாக திராவிடர் கழகம் தெரிவித்திருந்தது, பின்னர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணையும் வழங்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனை தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு இங்கு உறுதிப்படுத்தி உள்ளது. எனவே, பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு தவெக அரசால் தடை விதிக்கப்படவில்லை, ஆரம்பத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை காரணம்காட்டி அனுமதி மட்டுமே மறுக்கப்பட்டது.