Anitha Radhakrishnan Asset Case: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேரை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. திமுகவில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது திருச்செந்தூர் எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்ததன் ஆகிய ஏழு பேரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டார்.
2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக புகார் எழுந்தது.
தொடர்ந்து, 2006ஆம் ஆண்டில் அமைந்த திமுக, ஆட்சியில், 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரம் கோடி சொத்து சேர்த்தாக அவர் மீது துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி; மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன்; சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்ததன் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை துாத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 108 சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகினர்
இதைத் தொடர்ந்து 4.30 மணி அளவில் வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசு தரப்பு நிரூபிக்காததால் இந்த வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி; மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன்; சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்ததன் ஆகிய ஏழு பேரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்
கடந்த 20 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.