விவசாயிகள் ரூ.6,000 பெற வேண்டுமா? அப்போ இது அவசியம்.. தமிழக அரசின் அறிவிப்பு
TN Government: விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகையினை தொடர்ந்து பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அடையாள அட்டை எண்ணை உடனே பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
TN Government: பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில் தொடர்ந்து ஒன்றிய அரசு வழங்கிடும் தவணைகளைப் பெற்றிட தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை தங்களது நில உடைமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில உடைமை ஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கான அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது.
விவசாய அடையாள எண் கட்டாயம்
எதிர்வரும் காலங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டப் பயன்களுக்கும் அடிப்படையாக இந்த அடையாள எண் இருக்கும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதுநாள் வரை நில உடமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை ஆதார் எண்,கைபேசி எண், நில ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வேளாண் அடுக்க வலைதளத்தில் இதற்கு முன்னர் பதிவு செய்த விவசாயிகள் அதே விவசாய அடையாள எண்ணில் வேறுபகுதிகளில் தங்களுக்கு இருக்கும் பிற நிலங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதே அடையாள எண்ணில் இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறரர்கள்.
விவசாய அடையாள அட்டை எண் பெற விண்ணப்பிக்கலாம்
ஒற்றை சாளர முறையில் அனைத்து துறை பயன்களை பெறவும்,கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெறவும் .பி.எம்.கிசான் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநில திட்டங்களால் பயனடையவும் தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த திட்ட பலன்கள் வழங்கும் அனைத்து அரசு துறைகளுக்கும் இத்தரவுகள் வழங்கப்பட்டு, இதன் அடிப்படையிலேயே திட்ட பயன்கள் வழங்கப்படும்.
பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாய பெருமக்கள் தங்கள் ஆதார் எண் வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்திடவும் இ-சேவை மையத்தினை அணுகி ekyc விவரங்ளை பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறுலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தான், பிஎம் கிசான் (PM-Kisan) திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.