Trichy News : தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து ஈட்டுறுதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளைப் பெறத் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
சீர்மரபினர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்குப் பின்வரும் உதவிகள் வழங்கப்படுகின்றன:
1. விபத்து ஈட்டுறுதித் திட்டம்: விபத்து நிவாரண உதவியாக அதிகபட்சமாக ரூ.1,25,000 வரை வழங்கப்படும்.
2. இயற்கை மரண உதவித்தொகை: இயற்கை மரணமடையும் உறுப்பினர்களின் குடும்பத்திற்கு ரூ.30,000 வழங்கப்படும்.
3. ஈமச்சடங்கு உதவித்தொகை: இறுதிச் சடங்கு செலவுகளுக்காக ரூ.5,000 நிதி அளிக்கப்படுகிறது.
4. கல்வி உதவித்தொகை: கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.8,000 வரை உதவித்தொகை கிடைக்கும்.
5. திருமண உதவித்தொகை: உறுப்பினர்களின் திருமணத்திற்கு ரூ.3,000 அல்லது ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும்.
6. மகப்பேறு உதவித்தொகை: பெண்களுக்கு மகப்பேறு கால உதவியாக ரூ.6,000 வழங்கப்படுகிறது.
7. மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை: கண் பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி வாங்குவதற்காக ரூ.750 ஈடு செய்யப்படும்.
8. முதியோர் ஓய்வூதியம்: தகுதியான முதியோருக்கு மாதந்தோறும் ரூ.1,200 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்புவோர் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 60 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் அவசியம். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர், நிலமற்ற விவசாயக் கூலிகள் மற்றும் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து நலத்திட்டங்களைப் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர்.
உறுப்பினராகப் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகிய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் www.dncwb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.
சீர்மரபினர் நல வாரியத்தில் ஏற்கனவே உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ளவர்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, உறுப்பினர்கள் தங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட சுய விவரங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் "மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சிராப்பள்ளி" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.