பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?
13 லட்சம் பேர் பின்தொடர்ந்த பைனான்ஸ் இன்ஃப்ளூயன்சர் ஹரிஷ் தற்கொலை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மரணத்திற்கு ஜேசன் சாமுவேல் மற்றும் இணையவழி துன்புறுத்தல் (Cyber Bullying) காரணம் என ஹரிஷ் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் நிதி ஆலோசனை வழங்கும் பிரபலமாக அறியப்படுபவர் ஹரிஷ். இந்நிலையில், ஹரிஷ் இணையவழி துன்புறுத்தல் (Cyber Bullying) காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை விநாயகம் புகார் அளித்துள்ளார்.
ஹரிஷின் உயிரிழப்பு சமூக வலைதள பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இணையத்தில் அவருக்கு எதிராக பரப்பப்பட்ட தகவல்களால் அவர் மன உளச்சலுக்கு ஆளானதாக பிரபலங்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
(தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுபவர்கள் அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடனடியாக உதவி பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் (சென்னை): 044-24640050 அல்லது 044-24640060; தமிழ்நாடு அரசின் மருத்துவ உதவி மையம்: 104; டெலி-மானஸ் (Tele-MANAS) உதவி எண்: 14416)
ஹரிஷ் தந்தை புகார்
சில நாட்களுக்கு முன் ஹரிஷின் மீது அவதூறு பரப்பும் வகையில் யூ-ட்யூப் தளத்தில் ஜேசன் சாமுவேல் என்பவர் பதிவிட்ட வீடியோ, அதன் காரணமாக நடந்த சைபர் புல்லியிங் ஆகியவைதான் தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை விநாயகம் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஜேசன் சாமுவேல் சமூக வலைதளச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஹரிஷுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பி, அவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்தி சைபர் புல்லியிங் செய்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஷ், நேற்று (அக். 20) காலை தனது முட்டுக்காடு பகுதியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.
ஹரிஷ் வெளியிட்ட கடைசி வீடியோ
இறப்பதற்கு முன்பாக ஹரிஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது தற்கொலைக்குக் காரணம் ஜேசன் சாமுவேல் தான் என குறிப்பிட்டுள்ளார்.
ஜேசன் சாமுவேல் தன்னிடம் 3 கோடி பணம் கேட்டதாகவும், பணம் தராவிட்டால் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கிவிடுவேன் என்றும், புதிதாக கணக்கு தொடங்கினாலும் முடக்குவேன் என்றும் மிரட்டினார் என குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி எம்எல்ஏ மற்றும் முதலமைச்சரைத் தெரியும் என்று கூறி பெற்றோரைத் தூக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹரிஷ் தந்தை முன்வைத்த கோரிக்கைகள்
- ஜேசன் சாமுவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
- ஜேசன் சாமுவேலின் சமூக வலைதளப் பதிவுகள், வீடியோக்கள் மற்றும் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
- ஹரிஷ் இறப்பதற்கு முன் அவர் பதிவு செய்த வீடியோ, சமூக வலைதள இணைப்பு வீடியோக்கள், ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களைப் பாதுகாத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- இச்சம்பவம் குறித்து சென்னை கானத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜேசன் சாமுவேல் வெளியிட்ட வீடியோவை முதன்மையாக ஆதாரமாக கொண்ட தற்கொலைக்கு துண்டுதல் பிரிவின் கீழ் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
- அந்த வீடியோவில் தனிநபர் தாக்குதல் இருக்கிறதா, வீடியோ வெளியான பின் ஹரிஷுக்கு ஏதேனும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதா உள்ளிட்ட கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. ஹரிஷின் லேப்டாப், மொபைல் உள்ளிட்டவை பறிமுதல் செய்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
யார் இந்த ஹரிஷ்?
- புதுச்சேரியை சேர்ந்த ஹரிஷ் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். நிதி சார்ந்த ஆலோசனைகளை தொடர்ச்சியாக வழங்கி வந்தவர்.
- High Net-worth Individuals எனப்படும் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களுக்கு நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்ததாக அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து வந்தார்.
- இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹரிஷின் Finance with Harish என்ற பக்கத்தை பின்தொடர்ந்து வந்ததாக தெரிகிறது.
- ஆனால் இந்த பக்கம் Meta நிறுவனத்தால் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹரிஷ் கடும் மன உளச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கினாலும் அடுத்தடுத்து சில முயற்சிகளை மேற்கொண்டு, வேறு பக்கத்தை தொடங்கி அதில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் என்றும் தெரிகிறது.
ஜேசன் சாமுவேல் போட்ட வீடியோ
இந்தச் சூழலில், The Jason Samuel என்ற யூ-ட்யூப் பக்கத்தில் ஜேசன் சாமுவேல் என்பவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி Dark world of Finance Influencers என்ற தலைப்பில் சுமார் 1 மணிநேரம் 7 நிமிடங்களுக்கு நீண்ட நெடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளிட்டவை குறித்து நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் சமூக வலைதள பிரபலங்கள் திரைக்குப் பின்னால் செய்யும் தவறுகள், சட்டவிரோத செயல்கள் ஆகியவற்றை விளங்குவதாக ஜேசன் சாமுவேல் குறிப்பிட்டிருந்தார். அதில் ஹரிஷ் மீது ஜேசன் சாமுவேல் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
ஹரிஷ் மீதான குற்றச்சாட்டுகள்
- ஹரிஷ் தன்னை ஒரு Certified Investment Advisor/Financial Advisor என்று கூறிக்கொள்கிறார், ஆனால் இந்தியாவில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் பங்குச் சந்தை அல்லது முதலீட்டு ஆலோசனைகளை வழங்க செபியில் Registered Investment Advisor (RIA) அல்லது Research Analyst (RA) உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் ஜேசன் சாமுவேல்.
- ஆனால் அவரிடம் NISM (National Institute of Securities Market) தேர்வு சான்றிதழ் மட்டுமே உள்ளதாகவும், செபி பதிவு இல்லை என்றும் ஜேசன் சாமுவேல் குற்றஞ்சாட்டி இருக்கிறார். NISM சான்றிதழ் என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே தவிர, அது ஆலோசனை வழங்குவதற்கான அரசு உரிமம் அல்ல என்றும் ஜேசன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
- மேலும் தகுந்த உரிமம் இல்லாமல் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்து ஆலோசனை வழங்கியதாவும், ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பு வாய்ந்த HNI (High Net-worth Individuals) வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகக் கூறி ஆண்டிற்கு லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
- செபி விதிகளின்படி, குறிப்பிட்ட Multibagger பங்குகள் அல்லது போர்ஃபோலியோ ஆலோசனைகளை உரிமம் இன்றி வழங்கக் கூடாது என்றும் ஆனால் ஹரிஷ் பல கல்லூரிகளில் உரையாற்றும்போதும் சமூக வலைதளங்களிலும் குறிப்பிட்ட பங்குகள், ஃபண்டுகளை பரிந்துரைத்து, தனிப்பட்ட ஆலோசனைத் திட்டங்களுக்கு பணம் வாங்கி உள்ளஆர் என்றும் ஜேசன் குற்றஞ்சாட்டினார். google form/லிங்குகள் மூலம் பணம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
- கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வாடகை பங்களாவை தனது சொந்த வீடு போல காட்டி Vlogs போட்டதாகவும், வீடு வாங்க நண்பர்கள் ரூ.50 லட்சம் கொடுத்ததாக பேசியது உள்பட ஆடம்பர வாழ்க்கை முறையை முன்னிலைப்படுத்தி இளைஞர்களை நம்பவைத்து பாலோயர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்தார் என்றும் ஜேசன் குற்றஞ்சாட்டினார்.
- அதேநேரத்தில் 1.3 மில்லியன் பாலோவர்ஸ் கொண்ட இன்ஸ்டாகிராம் தொழில்நுட்பக் கோளாறால் அல்லது கமெண்ட் ஆட்டோமேஷனால் தற்காலிகமாக முடங்கியதாக ஹரிஷ் குறிப்பிட்டதை ஜேசன் மறுத்துள்ளார்.
- சட்டவிரோத ஆலோசனைகள் மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்பாக பயனர்கள் அளித்த புகார்களை ஏற்று, சமூக வழிகாட்டுதல்களை மீறியதாக மெட்டா அவரது கணக்கை நிரந்தரமாக நீக்கியதாக ஜேசன் குற்றஞ்சாட்டி இருந்தார். அந்த வீடியோவில் ஹரிஷை 'திருட்டு பையன்' என்றும் ஜேசன் குறிப்பிடுகிறார்.
- ஹரிஷ் உயிரிழந்த நிலையில், யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேல், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது வீடியோவின் கமெண்டில் ஜேசன் சாமுவேல், "நடந்தவற்றால் நான் மிகுந்த துயரத்திலும், ஆழ்ந்த துக்கத்திலும் அதிர்ச்சியிலும், உறைந்து போன நிலையிலும் இருக்கிறேன். மேலும், இந்த உயிர் இழப்பிற்காக நான் துக்கப்படுகிறேன்.
- அவரிடம் உரிமம் இல்லை, உரிய சான்றிதழ்கள் இல்லை, அவரது உரிமம் குறித்து அவர் தவறாக கூறியவை, செபி மற்றும் AIFM-க்கு அவர் செய்த மோசடியையும் நான் சுட்டிக்காட்டினேன். அவர் செய்த பணிக்கு உரிய செபி RIA உரிமம் வைத்திருக்கவில்லை. சமீபத்தில் ARN பெற்ற அவர், தன்னிடம் AIFM உரிமம் இருப்பதாகத் தவறாகக் கூறினார். அதாவது இது அவரது சட்டவிரோத செயல்பாடாகும்.
- சரியான செபி உரிமத்துடன் திரும்பி வந்து இந்த பணியைச் செய்யுமாறு நான் அந்த வீடியோவில் அவரிடம் வெளிப்படையாகவே கேட்டேன். இத்தகைய கடுமையான செயலில் இறங்குவார் என ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்த இழப்புக்கு நான் துக்கப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதள பிரபலங்கள் மீதான செபி நடவடிக்கை
பதிவு செய்யப்படாத நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் சமூக வலைதள பிரபலங்கள் பங்கு சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதையோ, வர்த்தக அழைப்புகளை விடுப்பதையோ அல்லது வருமானம் குறித்து கோரிக்கைகளை முன்வைப்பதையோ செபி தடை செய்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ், தரகர்கள் போன்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்வதையும் செபி தடை செய்துள்ளது.
செபி களமிறக்கிய Sudarshan AI
- யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிதி சார்ந்து பரவும் தவறான தகவல்கள், பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசனைகள், சட்டவிரோத செயல்பாடுகள் ஆகியவற்றை கண்டறிய செபி அமைப்பு Sudarshan AI என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கி உள்ளது.
- செபியின் இந்த நடவடிக்கையில் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கமும் சிக்கியிருக்கலாம் என சிலர் சந்தேகிக்கின்றனர். கடந்தாண்டு ஹரிஷிற்கு செபி எச்சரிக்கை விடுத்ததாக அவரே ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். Direct பங்குகளை பரிந்துரைப்பது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து செபி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- இதுகுறித்து ஷேஷாத்ரி தனசேகரன் என்ற சமூக வலைதள பிரபலம் அவரது பேஸ்புக் பதிவில், Sudarshan AI மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட கால வரையறைக்குள் அவர்களே தங்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கிய பின்னர் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- விசாரணையில் குறிப்பிட்ட நபரின் பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரம், நெருங்கியவர்களின் வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும் என்றும் அதில் சந்தேகத்திற்கு இடமான பணப் பரிவர்த்தனை இருந்தால் கணக்கு முடக்கப்படும் என்றும் ஷேஷாத்ரி தனசேகரன் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்கு பின் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கு பின்னரே கணக்கு விடுவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த சிக்கல் வட இந்திய பைனான்ஸ் இன்ஃப்ளூயன்ஸ்ர்கள் பலருக்கும் நடக்கிறது என்றும் அந்த பட்டியலில் ஹரிஷ் இருக்கிறார் என பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், Sudarshan AI காரணமாகவே தனது இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் பக்கத்தை ஹரிஷ் தானாகவே நீக்கியிருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
- மேலும், ஜேசன் வீடியோ போட்டதால் இப்படி ஆகிவிட்டது என சொல்வது சரியில்லை என்றும் காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்கிறது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுரை
சைபர் புல்லியிங் காரணமாக ஹரிஷ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை புகார் தெரிவித்திருக்கும் சூழலில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில், ஹரிஷ் குறித்து பல குற்றச்சாட்டுகள் முன்வைத்திருக்கும் சூழலில் அதையும் போலீசார் தங்களின் விசாரணையில் இணைத்துக்கொள்வார்கள் என தெரிகிறது.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இணையத்தில் ஒருவர் மோசடி செய்கிறார் அல்லது மோசடி செய்வதாக சந்தேகம் எழுகிறது என்றால் அவர் மீது சட்ட ரீதியாக புகார் கொடுக்கலாமே தவிர, அவரை கமெண்டிலோ அல்லது பதிவிட்டோ தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது சரியாகாது. எனவே, ஒருவர் மீது இணையத்தில் கடுஞ்சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.