SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: தொடக்கக் கல்வித்துறையின் புதிய சுற்றறிக்கை!

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நியமன ஒப்புதலுக்கு புதிய கெடு விதித்து தொடக்கக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. முழு விவரம்

Written By Karthikeyan Sekar
Published: Nov 11, 2026, 04:31 PM IST | Updated: Nov 11, 2026, 04:39 PM IST
Image Credit: aided school teachers latest news
Join

தமிழ்நாட்டில் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவது, பணி நியமனங்களுக்கு ஒப்புதல் பெறுவது மற்றும் ஆசிரியர் நிர்ணயம் தொடர்பான கோப்புகள் மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மாதக்கணக்கில் முடங்கிக் கிடப்பதாகப் புகார்கள் தொடர்ந்து வந்தன. மதுரை மாவட்டம் அரசரடியில் உள்ள நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் செயலாளர், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

மேலும் படிக்க | ரூ.1.57 லட்சம் மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை: எப்படி விண்ணப்பிப்பது?

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வித்துறை அதிகாரிகளின் மந்தமான மற்றும் அலட்சியப் போக்கே நீதிமன்றங்களில் குவியும் வழக்குகளுக்கு முக்கியக் காரணம் என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முன் அனுமதி, நியமன ஒப்புதல்கள் மற்றும் ஆசிரியர் நிர்ணயம் ஆகிய பணிகளுக்குக் காலக்கெடுவை நிர்ணயித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைச் சுற்றறிக்கையாக வெளியிட வேண்டும் எனப் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

புதிய நடைமுறை மற்றும் காலக்கெடு நிர்ணயம்

உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம்-2018 மற்றும் விதிகள்-2023-ன் படி கோப்புகளைக் கையாளக் கடுமையான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரப்பத்தகுந்த பணியிடத்தை நிரப்ப அனுமதி கோரும் கருத்துருக்கள் பெறப்பட்டால், வட்டாரக் கல்வி அலுவலகம் 15 நாட்களுக்குள்ளும், மாவட்டக் கல்வி அலுவலகம் 21 நாட்களுக்குள்ளும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் கோரும் கருத்துருக்களுக்கும் வட்டார அளவில் 15 நாட்களும், மாவட்ட அளவில் 21 நாட்களும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

மாதிரி சரிபார்ப்புப் பட்டியல் மற்றும் பதிவேடு பராமரிப்பு

அதிகாரிகள் தேவையற்ற காரணங்களைக் கூறி கோப்புகளைத் திருப்பி அனுப்புவதைத் தடுக்கவும், மாநிலம் முழுவதும் ஒரே சீரான நடைமுறையை உறுதி செய்யவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மாதிரி சரிபார்ப்புப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. கோப்புகளை ஆய்வு செய்யும்போது இந்தச் சரிபார்ப்புப் பட்டியலின் படியே உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  

மேலும், பெறப்படும் கருத்துருக்கள் தொடர்பாகத் தனியாகப் பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட வேண்டும். அப்பதிவேட்டில் கருத்துருக்கள் பெறப்பட்ட நாள், எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் இறுதியாக ஆணை வழங்கப்பட்ட விவரங்கள் ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  

தாமதித்தால் சம்பளப் பிடித்தம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை

உரிய காலக்கெடுவிற்குள் நடவடிக்கை எடுக்காமல் கோப்புகளைத் தாமதப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் என இயக்குநர் எச்சரித்துள்ளார். உரிய காலத்தில் முடிவெடுக்காத காரணத்தால் மனுதாரர்கள் நீதிமன்றங்களை நாடுவதும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால் அரசு நிதி இழப்பை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.  

இத்தகைய நீதிமன்ற வழக்குகளால் ஏற்படும் நிதி இழப்பை, பணிகளைத் தாமதப்படுத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்ய நேரிடும் என்று சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உத்தரவுகளைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் - இந்த அதிரடி உத்தரவின் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் நியமன ஒப்புதல், வருடாந்திர ஆசிரியர் நிர்ணயம், நிலுவைத் தொகை மற்றும் ஊதிய விவகாரங்கள் இனி தடையின்றி நடக்கும். கோப்புகள் அதிகாரிகளின் மேசைகளில் தேங்குவது தடுக்கப்பட்டு, 15 முதல் 21 நாட்களுக்குள் விரைவான தீர்வு எட்டப்படுவது உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்குக் கிடைத்துள்ள பெரும் நிம்மதியாகும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES