TN School Education News : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தெரிவு செய்யப்பட்ட 2,251 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கட்டாயப் பயிற்சி வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இப்பயிற்சிக்காக மொத்தம் ரூ.8,66,740 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பயிற்சியின் நோக்கம்
2026–2028 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய உறுப்பினர்கள் பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றில் தீவிர பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்யவும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்கவும் இப்பயிற்சி நடத்தப்படுகிறது. ஏற்கனவே முதற்கட்டமாக 3,744 பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், தற்போது குழு 'B' பிரிவைச் சேர்ந்த 2,251 தலைமை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வரும் 12.11.2026 முதல் 07.12.2026 வரை மாவட்ட வாரியாக உள்ள பயிற்சி மையங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இருப்பினும், பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்கே மையத்திற்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிற்சிக்கான உணவு, குடிநீர், சிற்றுண்டி மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக 'Training of SMC - Elementary' திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.8,66,740 விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில முதன்மைக் கருத்தாளர்கள் தங்கள் பயணச் செலவை மாநில அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பங்கேற்கும் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் அதற்கான பயணப்படி வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 179 பள்ளிகளுக்கு ரூ.66,560 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள், மாவட்ட பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் உரிய நேரத்தில் பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அவர்களைப் பணிவிடுப்பு செய்து, எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பயிற்சியைச் சுமுகமாக நடத்தி முடிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது