கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், அந்த தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார். மாவட்ட ஆட்சியர் பத்மஜா அருள் விக்னேஷ் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நிழைந்ததாகவும், அவரிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாக அறியப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, 'தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்' கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்கள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான மாநில அரசு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அல்லது காவல்துறையினரிடம் அந்த ஐஏஎஸ் அதிகாரி எந்தவொரு புகாரையும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். நீதிபதி வி. லட்சுமிநாராயணன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தலைமைச் செயலாளருக்கோ அல்லது காவல்துறையினருக்கோ எந்தப் புகாரும் வரவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை பெற்று தருமாறு உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாரயணன் உத்தரவிட்டார்.
எம்.எல்.ஏ மீது வழக்கு விசாரணைக்கு மனு
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.த்ரிசூலி என்பவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன் மனு தாக்கல் செய்தார். அதில் அவர், மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதும் மனுவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி கடந்த பதினோராம் தேதி டிஜிபியிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தில் எந்த வித வெளிப்புற அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெண் மாவட்ட ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருவதாகவும் இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிடக்கோரி மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது.
எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ‘தி இந்து’ உட்பட பல நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணிக்கம் தாக்கூர் X பதிவு
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது:
'The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 24, 2026
இது நாள் வரை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து எந்த புகாரும் வராததால், இந்த விவகாரம் தெளிவில்லாமல் இருந்த நிலையில், தற்போது அவரே புகார் அளித்துள்ளது இந்த வழக்கில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. மேலும், த.வெ.க -வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவரின் இந்த X பதிவும் அரசியல் சலசலப்பை உருவாக்கக்கூடும்.