ஆடை விற்பனை, பொருட்காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி: முக்கிய உத்தரவு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி உணவுத் திருவிழா, கண்காட்சிகள் நடத்தினால் சட்டம் பாயும் என ஆட்சியர் தினேஷ்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் முறையான அனுமதியின்றி வணிக ரீதியிலான ஆடை விற்பனைகள் மற்றும் உணவுத் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளை நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சதினேஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். உரிய அனுமதியின்றி விதியை மீறி செயல்படுவோர் மீது தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அளித்த புகார் மனு
மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் வணிக நோக்கிலான ஆடை விற்பனை நிகழ்வுகள் (Seasonal Sales), உணவுத் திருவிழாக்கள், விழாக்கால விற்பனைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வணிகக் கண்காட்சிகள் ஆகியவை அரசு அனுமதியின்றி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன.
இதன் காரணமாக உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கும் உள்ளூர் அமைப்புகளுக்கும் வரி மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டு, இதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விதிமீறினால் சட்ட நடவடிக்கை
வணிகர்களின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "Tamilnadu Public Building (Licensing) Act 1965-ன் படி கட்டிட உரிமம் எந்த உபயோகத்திற்காக வழங்கப்பட்டதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்" என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் ஆடை விற்பனைகள், பொருட்காட்சிகள் அல்லது வணிகக் கண்காட்சிகளை உரிய முன்அனுமதி பெறாமல் நடத்துவது சட்டவிரோதமாகும். அவ்வாறு அனுமதியின்றி விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது The Tamilnadu Public Building (Licensing) Act, 1965 Section 10(1)-ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு
திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தங்கும் விடுதிகளில் அனுமதியின்றி வணிக நிகழ்வுகள் நடைபெறுகின்றனவா என்பதைக் கள அளவில் தீவிரமாகக் கண்காணிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி தயவுதாட்சண்யமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.