SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை மாற்றிய உதயநிதி? 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கு முடிவில் இருந்ததாகவும், அதனை உதயநிதி ஸ்டாலின் குறிக்கிட்டு வேட்பாளர்களை அறிவிக்கலாம் என பேசி அந்த முடிவை மாற்றியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது முதல் ஆளாக திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Written By R Balaji
Published: Sep 09, 2026, 19:45 IST | Updated: Sep 09, 2026, 19:51 IST
Join

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக நிலையில், திடீரென வேட்பாளர்களை அறிவித்துள்ளது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதிமுக வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவது தொடர்பாக திமுகவில் ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் களமிறங்கும் முடிவில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்கு வகித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

புறக்கணிப்பு முடிவை மாற்றிய உதயநிதி?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். இதனால் இங்கு நடைபெறும் இடைத்தேர்தலை எதிர்கொள்ளாமல் இருப்பது குறித்து திமுகவுக்குள் ஒரு தரப்பில் ஆலோசனை இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இடைத்தேர்தலை புறக்கணிப்பது கட்சிக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தலாம் என உதயநிதி ஸ்டாலின் கருதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, தேர்தலில் இருந்து விலகினால் எதிர்க்கட்சிகள் அதனை திமுகவுக்கு எதிரான பிரசாரமாக பயன்படுட்த்தக்கூடும் என்பதால் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

திமுக வெற்றி பெறுவது எனது பொறுப்பு - உதயநிதி ஸ்டாலின்

இடைத்தேர்தலில் களமிறங்குவதன் மூலம் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன், கட்சியின் தேர்தல் கள செயல்பாடுகளையும் தொடர்ந்து வலுப்படுத்த முடியும் என திமுக தலைமை கருதியதாக தெரிகிறது. இதன் அடிப்படையிலேயே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதாகவும், இந்த தேர்வு நடவடிக்கையிலும் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்காற்றியதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரண்டு தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற செய்வது தனது பொறுப்பு என உதயநிதி ஸ்டாலின் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நான்குமுனை போட்டி?

முக்கிய எதிர்க்கட்சியான திமுக இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்திருந்தால், அது கட்சியின் அரசியல் வலிமை குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் திமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பதால்ல், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டி மேலும் தீவிரமடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தேர்தல் களம் நான்குமுனை போட்டியாக மாறும் சூழல் உருவாகி உள்ளது.

பரந்தாமனுக்கு வாய்ப்பு

இதனிடையே மதுராந்தகம் தொகுதியில் திமுகவின் சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திமுக ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், கட்சியின் சார்பில் தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் பரந்தாமன் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக தெவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலளித்து வந்ததால், கட்சிக்குள் அவருக்கு ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பது, இடைத்தேர்தலை அந்தக் கட்சி தீவிரமாக எதிர்கொள்ள தயாராகிவிட்டதையே காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES