SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ராகுல் காந்தி போன் செய்தும் எடுக்காத ஸ்டாலின்? ஏன் இப்படி செய்தார்? பின்னணி என்ன?

MK Stalin Avoids Rahul Gandhi Phone Call? சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுக்க ராகுல் காந்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் ஸ்டாலின் அதனை தவிர்த்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Written By R Balaji
Published: Nov 18, 2026, 09:41 IST | Updated: Nov 18, 2026, 09:44 IST
Join

மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் நெருக்கமான நட்பில் இருந்து வந்தவர்கள். திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் அவர்களை அண்ணன் - தம்பி என பேசிக்கொண்டார்கள். ஆனால், தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்த உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக ராகுல் காந்தி தொடர்புகொள்ள முயன்றபோதும், ஸ்டாலின் அவருடன் பேசுவதைத் தவிர்த்ததாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சோனியா காந்தி புத்தக வெளியீடு.. ஸ்டாலினை தொடர்புகொண்ட ராகுல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்து 'Belonging: A Journey of Love' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நவம்பர் 16ஆம் தேதி டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்பியுள்ளார். இதற்காக அவரது அலுவலகத்திலிருந்து ஸ்டாலினின் அலுவலகத்தை தொடர்புகொண்டு, ராகுல் காந்தி தொலைபேசியில் பேச விரும்புவதாகவும், விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தகவல் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டபோது, வேறு முக்கியப் பணிகளில் இருப்பதாகக் கூறி ராகுல் காந்தியுடன் பேசுவதைத் தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சோனியா காந்தியின் புதிய புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் தனது செய்தியை அனுப்பியுள்ளார்.

ஸ்டாலின் - ராகுல் இடையே விரிசல்?

ஒரு காலத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியின் முக்கிய முகங்களாக ஸ்டாலினும் ராகுல் காந்தியும் திகழ்ந்தனர். பொதுக்கூட்டங்களிலும் தேர்தல் மேடைகளிலும் இருவரும் பரஸ்பரம் நட்பை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த உறவில் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீட்டின்போது அதிக இடங்களை கேட்டு காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், சுமுகமான உடன்பாட்டை எட்டுவதற்காக ஸ்டாலின் ராகுல் காந்தியை தொடர்புகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேசுவதற்காக ஸ்டாலின் சுமார் 5 முறை அழைத்தும் ராகுல் காந்தியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடித்து ஒன்றாக தேர்தலைச் சந்தித்தன. இருப்பினும், தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து ஒரே மேடையில் பங்கேற்கவில்லை. இதுவும் இரு தலைவர்களுக்கும் இடையேயான பழைய நெருக்கம் குறைந்துவிட்டதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது.

தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ்.. திமுகவுக்கு அதிர்ச்சி!

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றம் திமுக - காங்கிரஸ் உறவில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைத்ததை தொடர்ந்து, காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெற்றது. இந்த அரசியல் மாற்றத்தால் திமுக தலைமை அதிருப்தி அடைந்ததாகவும், குறிப்பாக ஸ்டாலின் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் விழாவில் முதல்வர் விஜய்..

இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் பங்கேற்றார். அவருடன் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் விஜய் ராகுல் காந்தியுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்ததும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. இத்தகைய சூழலில், ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்காமல் அவருடன் பேசுவதையே ஸ்டாலின் தவிர்த்ததாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தேர்தல் தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் மற்றும் கூட்டணி மாற்றம் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவை சுற்றி எழுந்துள்ள இந்தச் சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு எந்த நிலையை எட்டியுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES