Kolathur By Election: சென்னையில் தனியார் மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு நேற்று காலமானார். இதனால், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஸ்டாலின் கொளத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுகவின் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக மே 10ம் தேதி விஜய் பதவியேற்றார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் விஜய் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்ந்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்.
இதனால் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகள் காலி ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடந்த நிலையில் இந்த இரு தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. இதுவரை 6 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ பாபு நேற்று உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தவெகவின் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு நேற்று காலமானார். பெரம்பூரைச் சேர்ந்த வி.எஸ் பாபு கடந்த சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அப்போதைய முதல்வராக இருந்த ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தற்போது வி.எஸ்.பாபு மறைந்த நிலையில், விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் மீண்டும் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் களம் இறங்க வேண்டும் எனவும் திமுகவினரின் விருப்பமாகவும் இருந்து வருகிறது.
ஆனால் கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பில்லை என திமுக தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தாவீகா சார்பில் வி எஸ் பாபுவின் குடும்பத்தினர் ஒருவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. குறிப்பாக தாவிகா சார்பில் வி எஸ் பாபுவின் மகன் நிறுத்தப்பட உள்ளாரா என்று பேச்சுகளும் அடிப்படை தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, இந்த வெற்றி திமுகவுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என திமுகவில் சில தலைவர்கள் கூறுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "கொளத்தூர் ஒரு காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்ததால், கொளத்தூரை நாங்கள் சற்று கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் அணுகுவோம். பாபு நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும், அவரது குடும்பத்தினர் எப்போதும் ஒதுங்கியே இருந்து வந்துள்ளனர். முதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் சீட் வழங்குவது என்பதே கட்சியின் முதல் தேர்வாக உள்ளது. அவர்களுக்கு விருப்பமில்லாத பட்சத்தில், தவெக-வின் பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளராக இருந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் வி.சிவா உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களை களத்தில் இறக்க நாங்கள் பரிசீலிப்போம்" என்று கூறினர்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை, 2011 முதல் அத்தொகுதி தேர்தலை சந்தித்து வருகிறது. 2011, 2016,2021 தொடர்ந்து மூன்று முறை திமுக கொளத்தூர் தொகுதியில் வெற்றி கண்டுள்ளது. இந்த மூன்று தேர்தலிலும் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் 2026 ஆம் தேர்தல் முற்றிலும் மாறுபட்டவிதமாகவே இருந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவரும், அப்போதைய முதல்வராக இருந்த ஸ்டாலின் படுதோல்வியை சந்தித்தார். முதல்முறையாக தேர்தலை சந்தித்த தவெக கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றது.
தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு 82997 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். கிட்டத்தட்ட 45% வாக்குகளை வி.எஸ் பாபு பெற்றார் . அதே நேரத்தில் ஸ்டாலின் 74 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஸ்டாலினின் தோல்வி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இப்படியான சூழலில் தான், கொளத்தூர் தொகுதி விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.