TN Assembly News: நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் சீற்றம் காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது. பல அப்பாவி மக்கள் இந்த திடீர் வெள்ளத்தால் உயிர் இழந்துள்ள நிலையில், பலரை தேடும் பணி தீவிரமாக மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான மாநில அரசின் முயற்சிகள் குறித்து, வியாழக்கிழமையன்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன.
திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் இந்த விவகாரம் சட்டமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
உதவிக்கான தொலைபேசி எண்களுக்கு (helpline) வந்த அழைப்புகளின் எண்ணிக்கை மற்றும் இன்னும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
உதயநிதி ஸ்டாலின் கேள்வி:
"நேபாளத்தில் காணாமல் போன பல தமிழர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை. அரசின் உதவி எண்ணுக்கு எத்தனை அழைப்புகள் வந்தன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?"
நேபாளத்திற்குச் சென்ற 57 தமிழர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.
எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்
"57 தமிழர்களும் மீட்கப்பட்டுத் திரும்ப அழைத்து வரப்பட வேண்டும்"
மீட்புப் பணிகளுக்கு உதவ ஹெலிகாப்டரை அனுப்ப வேண்டும் என்றும், சுற்றுலாப் பகுதிகளில் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காங்கிரஸ் கட்சி
"தமிழ்நாட்டு யாத்ரீகர்களை மீட்க நேபாளத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பப்பட வேண்டும். சுற்றுலாத் தலங்களில் உள்ள பேரிடர் அபாயங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும்"
பயணக் குழுவின் நிலை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) குறிப்பிட்ட கவலைகளை எழுப்பியது. 57 பயணிகளில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ள நிலையில், மீதமுள்ள 37 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அக்கட்சி சுட்டிக்காட்டியது.
பாமக கேள்வி
"57 பேரில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 37 பேரின் நிலை என்ன? அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும்"
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள் குறித்த தகவல்களைக் கோரியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. ஒரு பயண முகமை மூலம் சுமார் 57 பேர் நேபாளச் சுற்றுலாவிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீர் வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது, அதே சமயம் 37 பேரின் நிலை பற்றிய கவலை உள்ளது.
தகவல்களை அறிய குடும்பத்தினர் பயண முகமையின் அலுவலகத்திற்குச் சென்று வருகின்றனர்; அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இது குறித்து கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கோடி கூறுயதாவது:
"இங்கிருந்து 57 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் 20 பேர் பாதுகாப்பாக உள்ளனர், மீதமுள்ளவர்கள் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்; வெளியுறவுத் துறை மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார்"
நேபாள யாத்திரை சென்றவர்களின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள். தொலைக்காட்சியில் பாதுகாப்பானவர்கள் பட்டியலில் பலரது புகைப்படங்கள் காட்டப்பட்டாலும், குடும்பத்தினருக்குத் தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் 103 தமிழர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஏ. ராஜமோகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். நேபாள அரசுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
"முதற்கட்டத் தகவலின்படி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த 54 தமிழர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்தனர்" என்று அவர் குறிப்பிட்டார். பயணிகளின் விவரங்களைச் சேகரித்து, அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அழைப்புகளை மேற்கொள்ளத் தனித்தனி தொலைபேசி எண்களை வழங்கியுள்ளோம். இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கூடுதல் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்"
பேரிடர் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
போட்டே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்புகள், இடப்பெயர்வு மற்றும் உள்கட்டமைப்புச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 175 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் நேபாளத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. 28 நாடுகளைச் சேர்ந்த சுமார் 476 பேர் குறித்த தகவல் ஏதும் இல்லை. இருப்பினும், இந்த எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு வருகிறது.
ராசுவா (Rasuwa) மாவட்டத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதை தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) உறுதிப்படுத்தியது. அங்கு 44 நேபாள ராணுவத்தினர், 28 நேபாளக் காவல்துறையினர் மற்றும் 13 ஆயுதப் படைப் பிரிவு உறுப்பினர்கள் உட்படப் பல பாதுகாப்புப் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அது தெரிவித்தது.
நேபாளத்திற்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளது. 37.5 டன் எடையுள்ள மனிதாபிமான உதவிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொட்டலங்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானம் புறப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. முன்னதாக, நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் 10 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் நேபாளத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.