’தவெகவின் அரசியல் பழிவாங்கல்..’ நாதக நிர்வாகிகள் கைது! கொந்தளித்த மு.க.ஸ்டாலின்..
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, விதிகளை மீறியது மற்றும் காவல் நிலையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக நாம் தமிழர் கட்சியினர் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், 6 பேரை தற்போது காவல்துறை கைது செய்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கு முன்னர், இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, விதிகளை மீறியது மற்றும் காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக, நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும், தாராபுரம் தொகுதியின் வேட்பாளருமான கார்த்திகா மற்றும் அவருடைய கணவர் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தற்போது இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்!
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாதக வேட்பாளர்களின் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இது தவெகவின் அரசியல் பழிவாங்கல்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தன் பதிவில் அவர், “நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்” என்ற்று குறிப்பிட்டிருக்கிறார்.
டிடிவி தினகரன்:
இவரைத்தொடர்ந்து, டிடிவி தினகரனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் திருமதி கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, திருமதி கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.
சீமான் ட்வீட்..
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிரார்.
இந்த ட்வீட்டில் அவர், “அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்” என குறிப்பிட்டிருக்கிறார்.