SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி டோல் கேட்ல நிற்க வேண்டாம்.. பரனூரில் அமலான புதிய வசதி!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அக்டோபர் 1 முதல் தடையில்லா டோல் வசூல் முறை அமலுக்கு வந்துள்ளதால், இனி வாகனங்கள் நிற்காமல் FASTag மூலம் தானாக சுங்கக் கட்டணம் செலுத்தலாம்.

Written By R Balaji
Published: Oct 01, 2026, 07:12 PM IST | Updated: Oct 01, 2026, 07:15 PM IST
Join

சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் இனி டோல் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்று அக்டோபர் 1 முதல் இங்கு தடையில்லா தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறையை அமல்படுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 45ல் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடி தாம்பரம் - திண்டிவனம் இடையேயான 46.5 கி.மீ. சாலை பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பத்தின் மூலம் முழுமையாக தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் முதல் சுங்கச்சாவடி என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது.

எப்படி செயல்படும்?

புதிய முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நின்று கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வாகனம் சுங்க வசூல் பகுதிக்குள் நுழையும்போதே அங்கு பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்பக் கருவிகள் மூலம் FASTag விவரங்கள் வாசிக்கப்படும்.

அதே நேரத்தில், சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள Automatic Number Plate Recognition கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண்ணையும் தானாக பதிவு செய்யும். இந்த இரண்டு தகவல்களையும் இணைத்து, அந்த வாகணத்திற்கான சுங்கக் கட்டணம் கணக்கிடப்பட்டு FASTag கணக்கில் இருந்து வசூலிக்கப்படும். இதனால் குறிப்பிட்ட சுங்கப் பாதையில் வாகனத்தை நிறுத்துவது, வரிசையில் காத்திருப்பது போன்ற நடைமுறைகள் இருக்காது.

நெரிசல் குறையும்

பரனூர் சுங்கச்சாவடியில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கம், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதாகும். சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் தொடர்ந்து செல்ல முடிவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வாகனங்கள் சுங்கச்சாவடியில் என்ஜினை இயக்கியபடி காத்திருக்க வேண்டிய நிலை குறைவதால் எரிபொருள் பயன்பாடும், வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு அளவும் குறைய வாய்ப்புள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணியில் மனித தலையீட்டையும் குறைத்து, பரிவர்த்தனைகளை வேகமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ள இந்த தொழில்நுட்பம் உதவும் என NHAI தெரிவித்துள்ளது.

FASTag இல்லையென்றால் என்ன ஆகும்?

இந்த முறையில் பயணிக்கும் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் FASTag மற்றும் போதுமான இருப்புத்தொகை இருப்பது அவசியம். FASTag செயல்படாமல் இருந்தாலோ அல்லது கணக்கில் போதுமான பணம் இல்லாமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு மின்னணு அறிவிப்பு வழங்கப்படும் என NHAI தெரிவித்துள்ளது.

எனவே, பரனூர் வழியாக தொடர்ந்து பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் தங்களது FASTag செயல்படுகிறதா என்பதையும், அதில் போதுமான தொகை உள்ளதா என்பதையும் முன்கூட்டியே உறுதி செய்துகொள்வது அவசியம்

தமிழகத்தில் மேலும் விரிவாக்கம்

பரனூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த தடையில்லா சுங்கக் கட்டண வசூல் முறை, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை நவீணப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். குஜராத், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மேலும் பல மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் இந்த முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையில்லா டோல் வசூல் முறை படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES