Tamil Nadu registration department : தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான நிர்வாகச் சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில், எல்லை வரம்புகளற்ற சொத்துப் பதிவு மற்றும் திருமணப் பதிவு முறையை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணை மூலம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘மாதிரி பதிவு மையங்கள்’ (Model Registration Hubs) அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பத்திரப்பதிவு நடைமுறையை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
இதுநாள் வரை நடைமுறையில் இருந்த பதிவுச் சட்டம் 1908 மற்றும் திருமணப் பதிவுச் சட்டங்களின்படி, ஒரு சொத்து எந்தப் பகுதிக்குட்பட்ட சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் (Jurisdiction) அமைந்திருக்கிறதோ, அங்கு நேரில் சென்றுதான் ஆவணங்களைப் பதிவு செய்ய முடியும். மணமக்கள் பதிவு திருமணங்களை மேற்கொள்ளவும் குறிப்பிட்ட அதிகார எல்லை வரம்புகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. இதனால் தொலைதூர மாவட்டங்களில் சொத்து வைத்திருப்பவர்கள், பதிவுப் பணிகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவியது.
இந்த நடைமுறைக்குத் தீர்வு காணும் நோக்கில், எல்லை வரம்புகளற்ற (Jurisdiction-free / Anywhere Registration) வசதியை அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் சொத்து அமைந்திருக்கும் அதே தாலுகா அல்லது சார் பதிவாளர் எல்லைக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. அங்கீகரிக்கப்பட்ட மாதிரி பதிவு மையங்களை அணுகி, ஒரே இடத்தில் இருந்தபடி தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் திருமணங்களை எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.
தமிழகப் பதிவுத் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரில் அலையத் தேவையில்லாத மற்றும் காகித பயன்பாட்டைக் குறைக்கும் ‘காகிதமில்லா பதிவு’ (Paperless Registration) நடைமுறையை நோக்கி நகர்வதே இதன் முதன்மைப் பார்வையாகும். அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்பட்டு, அதிவேக மென்பொருள் கட்டமைப்பின் மூலம் நிகழ்நேரத்தில் (Real-time) சரிபார்க்கப்படும் வசதிகள் இம்மையங்களில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் மொத்தம் 25 மாதிரி பதிவு மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக அதிகப் பதிவு எண்ணிக்கை கொண்ட 5 இடங்களில் முன்னோடித் திட்டமாக இந்த மையங்கள் தொடங்கப்பட உள்ளன:
1. வட சென்னை பதிவு மாவட்டம்
2. மத்திய சென்னை பதிவு மாவட்டம்
3. தென் சென்னை பதிவு மாவட்டம்
4. செங்கல்பட்டு பதிவு மாவட்டம்
5. கோயம்புத்தூர் வடக்கு பதிவு மாவட்டம்
இந்த 5 மையங்களின் செயல்பாடு, பொதுமக்களின் வரவேற்பு மற்றும் தொழில்நுட்ப வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாகத் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மேலும் 20 இடங்களில் இத்தகைய மையங்கள் விரிவுபடுத்தப்படும்.
முதற்கட்டமாக அமைய உள்ள 5 முன்னோடி மையங்களின் பணிகளுக்காக அரசு 7 கோடியே 84 லட்சத்து 15 ஆயிரத்து 236 ரூபாய் நிதியை மறுஒப்புதல் வழங்கி நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
முன்பு இத்திட்டம் அரசின் முழு நேரடிச் செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், செயல்பாட்டுத் திறன் மற்றும் தொடர் பராமரிப்பை உறுதி செய்வதற்காக, இது தனியார் சேவை வழங்குநர் மூலம் செயல்படுத்தப்படும் புதிய முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி (QCBS Tender) மூலம் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனம், இந்த மையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் தினசரிச் செயல்பாடுகளை 5 ஆண்டுகளுக்குப் பொறுப்பேற்று நடத்தும்.
பதிவு செய்ய வரும் பொதுமக்களின் எண்ணிக்கை மற்றும் ஆவணங்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு, மாதிரி பதிவு மையங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு அமைக்கப்பட உள்ளன:
Category-1: 8,000 சதுர அடி பரப்பளவு; 100 பேர் அமரக்கூடிய ஏர் கண்டிஷன் காத்திருப்பு அறை; 20 கணினிப் பணித்தளங்கள்.
Category-2: 5,000 சதுர அடி பரப்பளவு; 75 பேர் அமரக்கூடிய ஏர் கண்டிஷன் காத்திருப்பு அறை; 15 கணினிப் பணித்தளங்கள்.
Category-3: 3,000 சதுர அடி பரப்பளவு; 50 பேர் அமரக்கூடிய ஏர் கண்டிஷன் காத்திருப்பு அறை; 10 கணினிப் பணித்தளங்கள்.
- சாதாரண அரசு அலுவலகங்கள் போலன்றி, தனியார் பெருநிறுவன அலுவலகத்திற்கு நிகரான குளிர்சாதன காத்திருப்பு அறை வசதி.
- பொதுமக்கள் தங்களின் ஆவண விவரங்களை நிகழ்நேரத்தில் சரிபார்க்க உதவும் இரட்டைத் திரை கொண்ட பணித்தளங்கள்.
- கைமுறை பிழைகளைத் தவிர்க்க கண் விழித்திரை மற்றும் கைரேகை மூலம் இயங்கும் அதிநவீன பயோமெட்ரிக் e-KYC சரிபார்ப்புக் கருவிகள்.
- பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை அறிந்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள உதவும் தொடுதிரை தானியங்கி இயந்திரங்கள்
- நெரிசலைத் தவிர்க்க டிஜிட்டல் டோக்கன் வரிசை மேலாண்மைத் திரை.
- மின் தடை ஏற்படாமல் பணிகளைத் தொடர உயர்திறன் ஆன்லைன் மின்வழங்கி (UPS) மற்றும் டீசல் மின் இயக்கி (DG Set) வசதிகள்.
- 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு சிசிடிவி அமைப்புகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள்.
இந்த உயர்ரக மாதிரி பதிவு மையங்களில் ஆவணம் அல்லது திருமணங்களை விரைவாகவும் வசதியாகவும் பதிவு செய்வதற்கு, வழக்கமான முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களுடன் சேர்த்து கூடுதல் வசதிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தில் ஒரு பகுதி அரசுக்கும், மற்றொரு பகுதி மையத்தை நிர்வகிக்கும் சேவை நிறுவனத்திற்கும் வருவாய் பகிர்வாகச் செல்லும்:
1. சாதாரண சேவை: ஆவணம் ஒன்றுக்கு ரூ.2,000. இதில் அரசுப் பங்கு 80% மற்றும் தனியார் நிறுவனப் பங்கு 20%.
2. அவசர சாதாரண சேவை : ஆவணம் ஒன்றுக்கு ரூ.5,000. இதில் அரசுப் பங்கு 80% மற்றும் தனியார் நிறுவனப் பங்கு 20%.
3. சிறப்பு சேவை: ஆவணம் ஒன்றுக்கு ரூ.5,000. இதில் அரசுப் பங்கு 50% மற்றும் தனியார் நிறுவனப் பங்கு 50%.
4. அவசர சிறப்பு சேவை: ஆவணம் ஒன்றுக்கு ₹10,000. இதில் அரசுப் பங்கு 65% மற்றும் தனியார் நிறுவனப் பங்கு 35%.
இக்கட்டணங்கள் மூலம் கிடைக்கும் நிதியை நிர்வகிக்கவும், ஒப்பந்த நிறுவனத்திற்கான மாதாந்திரக் கட்டணங்களை வழங்கவும் பதிவுத் துறைத் தலைவரின் மேற்பார்வையில் தனியான அர்ப்பணிக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு பராமரிக்கப்படும்.
இம்மையங்களின் தொழில்நுட்ப மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் பதிவுத் துறையின் ‘STAR 2.0’ மென்பொருள் தனிப்பயனாக்குதல் பணிகளை, துறையின் பிரதான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ (TCS) மேற்கொள்ளும். இதற்கான கட்டமைப்புச் செலவுகளை ஒப்பந்த நிறுவனமே ஏற்கும்.
அதே நேரத்தில், மையத்தின் இயக்கம் மற்றும் அடிப்படைப் பணிகளைத் தனியார் நிறுவனம் கவனித்தாலும், ஆவணங்களைச் சரிபார்த்து சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து ஒப்புதல் அளிக்கும் முழு அதிகாரமும் அரசு சார் பதிவாளர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் வசம் மட்டுமே இருக்கும். மேலும், இந்த மையங்களின் செயல்பாட்டு எல்லைக்குள் தேவையற்ற போட்டியைத் தவிர்க்கும் விதமாக, ஒரு மாதிரி பதிவு மையம் அமைந்துள்ள இடத்திலிருந்து வான்வழியாக 3 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய மையம் எதுவும் அமைக்கப்படாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறையின் மூலம், மக்கள் தங்கள் பணியிடங்கள் அல்லது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள மாதிரி மையங்களை அணுகி, பிற மாவட்டங்களில் உள்ள தங்களின் அசையாச் சொத்துக்களை எளிதில் பதிவு செய்ய முடியும். வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், குளுகுளு அறையில் அமர்ந்து டோக்கன் முறையில் கண்ணியமான முறையில் பணிகளை முடிக்கலாம். அவசரத் தேவை உள்ளவர்கள் ‘தட்கல்’ வசதியைப் பயன்படுத்தி எவ்வித அலைச்சலுமின்றி அன்றைய தினமே ஆவணப் பதிவை விரைவாக முடித்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.