TASMAC new rule : தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் மிக முக்கியமான மாற்றங்களைச் செய்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவின்படி, மதுபான பாட்டில்களுக்கு அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைத் (MRP) தவிர்த்து, காலி பாட்டில் திட்டத்திற்காக தனியாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 இனி வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதிகளில் மது பாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்கும் நோக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன்படி, நுகர்வோரிடமிருந்து மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தவிர்த்து, கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் காலி பாட்டிலைக் கடையில் ஒப்படைக்கும்போது அந்த ரூ.10 ரொக்கமாகத் திருப்பித் தரப்பட்டு வந்தது.
தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம் 2006-ல் (TN VAT Act, 2006) செய்யப்பட்ட சட்டத் திருத்தம் (Act No.13 of 2026) மற்றும் வணிக வரித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின்படி:
ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல செஸ்' தொகையாக ரூ.10 விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.10 தொகையானது பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலைக்குள்ளேயே (MRP) சேர்க்கப்பட்டு விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, 01.11.2026 முதல் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் தனியாக கூடுதலாக ரூ.10 வாங்குவது முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்:
கூடுதல் வசூலுக்குத் தடை: பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட ஒரு பைசா கூட நுகர்வோரிடம் கூடுதலாக வசூலிக்கக் கூடாது.
ஒழுங்கு நடவடிக்கை: காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் என்ற பெயரிலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மற்றும் அதைக் கண்காணிக்கத் தவறிய மேற்பார்வை அதிகாரிகள் மீது மிகக் கடுமையான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும்.
பொதுமக்கள் மத்தியில் எழும் முக்கிய கேள்விக்கு இந்தச் சுற்றறிக்கையில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:
நுகர்வோர் காலி மது பாட்டில்களைக் கடைகளில் திருப்பி ஒப்படைக்கும் போது, அவர்களுக்கு வழக்கம்போல் ரூ.10 ரொக்கமாகத் திருப்பி வழங்கப்படும்.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான தானியங்கி இயந்திரங்கள் (Reverse Vending Machines) கடைகளில் முழுமையாகப் பொருத்தப்படும் வரை, இந்த நடைமுறை தற்காலிக ஏற்பாடாக நேரடியாகக் கடைகளிலேயே தொடரும்.
இதற்கான தொகை, பாட்டிலின் MRP விலைக்குள் சேர்க்கப்பட்டுள்ள செஸ் வரியின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஈடுசெய்யப்படும்.
"01.11.2026 முதல் மதுபானங்கள் அச்சிடப்பட்ட MRP விலைக்கு மட்டுமே விற்கப்படும்; காலி பாட்டில் திட்டத்திற்காக தனியாக எந்தத் தொகையும் வசூலிக்கப்படாது. அதேநேரம், காலி பாட்டில்களை ஒப்படைத்தால் நுகர்வோருக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும்" என்ற தகவலைக் கொண்ட அறிவிப்புப் பலகையைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகத் தெரியும் இடத்தில் வைக்க வேண்டும்.
இந்த அறிவிப்புப் பலகைகள் அனைத்தும் 31.10.2026-க்குள் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது