தீபாவளிக்குள் கிலோ ரூ.100-ஐ எட்டும்! உச்சத்தில் அரிசி விலை.. விழிபிதுங்கும் சாமானியர்கள் - காரணம் என்ன?
Rice Price Hike: இந்தியாவில் அரிசி, எண்ணெய், காய்கறிகளின் விலை உயர்ந்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை இன்னும் உயரலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Rice Price Hike: கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பொருளாதாரம், விலைவாசி பிரச்னை குறித்த கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஏனென்றால், இந்தியாவில் பணம், உணவு, எண்ணெய் போன்ற அத்தியாவசத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், பணத்தை இப்போது முதல் சேமித்து வைத்துக் கொள்வது சிறந்தது என அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு சமிக்ஞையாக இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
உச்சத்தில் விலைவாசி உயர்வு
குறிப்பாக, அரிசி, சர்க்கரை, வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி விலை டிசம்பர் மாதத்திற்குள் கிலோ ரூ.100-ஐ எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடந்த செப்டம்பரில் இருந்து அக்டோபர் மாதத்தில் பல உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி,
| உணவு பட்டியல் | செப்டம்பர் விலை (ரூ/கிலோ) | அக்டோபர் விலை (ரூ/கிலோ) |
| கடலை பருப்பு | ரூ.80 | ரூ.90 |
| துவரம் பருப்பு | ரூ.126 | ரூ.143 |
| உளுத்தம் பருப்பு | ரூ.120 | ரூ.128 |
| பாசிப்பருப்பு | ரூ.105 | ரூ.112 |
| மிளகாய் (குண்டு) | ரூ.330 | ரூ.420 |
| கொத்தமல்லி | ரூ.190 | ரூ.210 |
| மிளகாய் (நீளம்) | ரூ.275 | ரூ.290 |
| பாஸ்மதி அரிசி | ரூ.113 | ரூ.122 |
| சர்க்கரை | ரூ.43 | ரூ.50 |
| வெல்லம் | ரூ.100 | ரூ.120 |
| முந்திரி | ரூ.760 | ரூ.830 |
| முழு முந்திரி | ரூ.760 | ரூ.850 |
| திராட்சை | ரூ.320 | ரூ.420 |
அதே நேரத்தில் பால், எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது.
எட்டாகனியாகும் அரிசி
தமிழகம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை உச்சத்தில் இருக்கிறது. தற்போது ஒரு கிலா அரிசி விலை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யயப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அரிசியில் விலை ரூ.100-ஐ தொடங்கக் கூடும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். பல மாநிலங்களில் நெல் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் தேவை காரணமாக, அரிசியின் விலை ஏற்கனவே கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது.
கடந்த ஓரிரு மாதங்களாக அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி வகையைப் பொறுத்து, 25 முதல் 30 கிலோ எடையுள்ள ஒரு மூட்டையின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. ஒரு மூட்டை டீலக்ஸ் பொன்னியின் அரிசி விலை ரூ.1400க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1800 ஆக உயர்ந்துள்ளது. பொன்னி அரசியின் விலை ரூ.1600-லிருந்து ரூ.1,950 ஆகவும், வெள்ளை பொன்னியின் விலை ரூ.1,900-லிருந்து ரூ.2,300 ஆக உயர்ந்துள்ளது.
முன்னர் ஒரு மூட்டை இட்லி அரிசி ரூ.900க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பச்சரிசியின் விலை ரூ.1,500-லிருந்து ரூ.1,800 ஆகவும் அதிகரித்துள்ளது. 25 கிலோ சிவாஜி பொன்னி மூட்டையின் விலை ரூ.1,800-லிருந்து ரூ.2,400 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30 கிலோ பாஸ்மதி அரிசி மூட்டையின் விலையும் ரூ.3,300-லிருந்து ரூ.3,600 ஆக அதிகரித்துள்ளது.
அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்ன?
நெல் பற்றாக்குறையால் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் உயர்தர அரிசி வகைகள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதன் விளைவாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவில் உயர்தர நெல் இறக்குமதி செய்யப்படுகிறது. அரிசி ஆலைகளால் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது. மேலும், அரிசி மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு, உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்த பிறகு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இருப்பினும், தற்போது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல பிற மாநிலங்களிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் இருப்பும் குறைந்துள்ளது. விலை மேலும் உயர்வதைத் தடுப்பதற்கு, பிற மாநிலங்களில் இருந்து அதிக நெல்லைக் கொள்முதல் செய்து ஆலைகளில் சேமித்து வைக்க வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர்களும் நெல் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.
பருவமழை நெற்பயிரை எவ்வாறு பாதித்தது?
நீர் அதிகம் தேவைப்படும் பயிராக நெல் இருக்கிறது. இதற்குப் பருவகால மழையும், தாவர வளர்ச்சியின் சில கட்டங்களில் கூடுதல் நீரும் தேவைப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் நீண்ட வறண்ட காலங்கள் மற்றும் குறைந்த மழைப்பொழிவுடன் இருந்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 12.6% முதல் 13% வரை குறைவாகப் பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) படி, நாட்டில் உள்ள 36 வானிலை மண்டலங்களில், 53% பரப்பளவைக் கொண்ட 18 மண்டலங்கள் மட்டுமே இயல்பான மழையைப் பெற்றுள்ளன. அதேவேளையில், 42% பரப்பளவைக் கொண்ட 17 மண்டலங்களில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பதிவாகியுள்ளது.
பருவமழையின் இந்த சீரற்ற தன்மையும், மழைப்பற்றாக்குறையும் நீர் தேவை அதிகம் கொண்ட நெல் சாகுபடியைப் பெருமளவில் பாதித்துள்ளன. நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் விலையும் கடுமையாக உயர்ந்து இருக்கிறது. நெல் வியாபாரிகள், தரகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் வரத்து அதிகரிக்கப்படாவிட்டால், தீபாவளிக்கு முன்பு அரிசி இருப்பு மேலும் குறைந்து, விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். பண்டிகைக்கு முன்னதாக சில ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.100-ஐ எட்டும் கூறியிருப்பது, சாமானியர்களை கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் படிக்க: Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?