வேளாண்மைப் பொறியியல் துறையின், மானிய விலையில் சூரிய சக்தி மின்வேலி அமைக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வேளாண்மைப் பொறியியல் துறையின், மானிய விலையில் சூரிய சக்தி மின்வேலி அமைக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இதுகுறித்து ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது ; சேலம் மாவட்ட விவசாயிகள், தங்கள் விளைநிலங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தும் ஆடு,மாடு, காட்டுப்பன்றி, காட்டெருமை, மான் மற்றும் யானை போன்ற விலங்குகளிடமிருந்து தங்களது பயிர்களை பாதுகாக்கவும், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான மோதலை தவிர்க்கவும் வழிவகை செய்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 2026-2027 ஆம் நிதி ஆண்டிற்கு சூரியசக்தி மின்வேலி அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சூரிய மின்வேலி அமைப்பதனால் விலங்குகள், மின்வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியினால் அசவுகரியம் ஏற்பட்டு. விவசாய நிலங்களுக்குள் புகாத வண்ணம் தடுக்கப்படுகிறது.
இதன் மூலமாக விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு இல்லாமலும், முழுமையாக விவசாயிகளுக்கு கிடைத்திட வகை செய்யும். விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 566 மீட்டர் மின்வேலி அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதாக 20 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை அறிய செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் அலுவலகம், சேலம் (0427- 2906266) அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் உதவி செயற்பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவிப்பொறியாளர்/இளநிலை பொறியாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.