சந்தீப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்... 17 கைதிகள் தப்பியதன் எதிரொலி - தமிழக அரசு அதிரடி
சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் மற்றும் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியதன் எதிரொலியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அமலாக்கப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை (EBCID) ஏடிஜிபியாக இருந்த கே. சங்கர் ஐபிஎஸ், சிறைத்துறை ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | அன்பில் மகேஸுக்கு பின்னடைவு...! ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
தேனியில் 17 பேர் தப்பிய சம்பவம்
தேனி மாவட்டச் சிறையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு விசாரணைக் கைதிகள் 17 பேர் தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை என்றும் கூறப்பட்டது.
கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி காவலரை அவசர உதவிக்கு அழைப்பது போல் வர சொல்லி, கைதிகள் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கிவிட்டு தப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, சிறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, டிரோன்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேடுதல் வேட்டையை காவல்துறை முடுக்கிவிட்டது.
புழல் சம்பவத்தால் பரபரப்பு
இதில் 15 பேரை போலீசார் கைது செய்த நிலையில், கடைசியாக 2 பேர் நேற்று (அக். 28) போலீசாரிடம் சரண் அடைந்தனர். முன்னதாக சென்னை புழல் சிறையில் இருந்தும் சுதீப் போகதி, சுரேஷ் ஆகிய இரண்டு கைதிகள் வெவ்வேறு சூழல்களில் தப்பிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்பபடுத்தியது. இதில் ஒருவர் அண்ணாநகர் பகுதியில் இருந்தும், மற்றொருவர் குன்றத்தூர் பகுதியில் இருந்து பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புழல் சிறையில் இரண்டு சிறை கைதிகள் தப்பித்த போது, தமிழ்நாட்டின் பிற சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். ஆய்வு பணிக்கு உத்தரவிட்டிருந்த காலகட்டத்தில் 17 பேர் தப்பித்ததே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, சந்தீப் ராய் ரத்தோரை தமிழ்நாடு அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது.
5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்
டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஏடிஜிபி சங்கர் மட்டுமின்றி மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- சஞ்சய் மாத்தூர் ஐபிஎஸ்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சோனல் சந்திரா ஐபிஎஸ்: மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் ஐஜியாக இருந்த இவர், சென்னை டிஜிபி தலைமை அலுவலக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பி. ரகுபதி ஐபிஎஸ்: தாம்பரம் காவல் ஆணையரகம், பள்ளிக்கரணை துணை ஆணையராக இருந்த இவர், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ்: சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு (வடக்கு ) எஸ்பியாக இருந்த இவர், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- எஸ். அசோக் குமார்: தென்காசி மாவட்ட எஸ்.பி., ஆக இருந்த இவர், மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படை எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.