SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Special TNTET-2 ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: பிழை திருத்த 3 நாட்கள் மட்டுமே அவகாசம்!

சிறப்பு டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை, பிழை திருத்த இன்னும் 3 நாட்கள் மட்டுமே காலவகாசம்.

Written By Karthikeyan Sekar
Published: Nov 14, 2026, 14:15 IST | Updated: Nov 14, 2026, 14:26 IST
Image Credit: Special TNTET Exam Update
Join

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியம், அரசு, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட சிறப்புத் தகுதித் தேர்வு குறித்த மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பைத் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தங்கள் விண்ணப்பங்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ள ‘எடிட் ஆப்ஷன்’ என்ற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களுக்குள் திருத்தங்களைச் செய்யாத ஆசிரியர்களுக்குத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கூட வழங்கப்படாது என்றும், விண்ணப்பங்கள் மொத்தமாக நிராகரிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பின்னணி மற்றும் முக்கியத் தேதிகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர்ந்து, இதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்காக இந்த ‘Special TNTET-2’ அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பித்த காலம்: 27.10.2026 முதல் 19.11.2026 வரை.

தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2026 (முற்பகலில் பேப்பர்-2 மற்றும் பிற்பகலில் பேப்பர்-1 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

விண்ணப்பத் திருத்தக் காலம்: 20.11.2026 முதல் 22.11.2026 வரை (3 நாட்கள் மட்டுமே

என்ன பிரச்சினை நடந்தது? TRB சுட்டிக்காட்டிய பெரும் பிழைகள்

கடந்த ஜூலை 2026-ல் நடைபெற்ற முதல் கட்டத் தேர்வின் போது, ஆசிரியர்கள் பலர் தங்களின் சுய விவரங்களைப் பதிவு செய்வதில் கவனக்குறைவாக இருந்ததால் ஏகப்பட்ட பிழைகள் நேர்ந்ததாகத் தேர்வு வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக:

பெயர்களில் உள்ள எழுத்துப்பிழைகள்.

இனிஷியல் எனப்படும் தலைப்பெழுத்துகளில் உள்ள தவறுகள்.

முழுமையான பெயரைப் பதியாமல் சுருக்கமாகப் பதிவு செய்தது.

பிறந்த தேதியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள்.

பாலினம் மற்றும் சமூகப் பிரிவு மாற்றிப் பதிவு செய்யப்பட்டது.

தெளிவற்ற அல்லது தவறான புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்களைப் பதிவேற்றியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்யாதது.

இத்தகைய தவறுகளால், தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடுவதிலும், தேர்வு முடிவுகளைத் துல்லியமாக அறிவிப்பதிலும், இறுதித் தகுதிச் சான்றிதழ்களை வழங்குவதிலும் அரசுக்குக் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன

‘EDIT OPTION’ கடைசி வாய்ப்பு

விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த, 20.11.2026 முதல் 22.11.2026 வரை ஆன்லைன் போர்ட்டல் மீண்டும் திறக்கப்படும். ஆசிரியர்கள் தங்களின் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி, விண்ணப்பங்களைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தக் காலக்கெடுவுக்குள் பிழைகளைச் சரிசெய்யத் தவறினால், தேர்வுக்கான ஹால் டிக்கெட் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது. மேலும், தேர்வுக்குப் பின்னர் சான்றிதழ்களில் பெயர் மற்றும் விவரத் திருத்தங்கள் கோரி வரும் எவ்வித விண்ணப்பங்களும், முறையீடுகளும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

புதிய பணிச் சான்றிதழ் கட்டாயம்

இதுவரை வழக்கத்தில் இருந்த அல்லது கடந்த ஜூலை 2026-ல் நடந்த முதற்கட்டத் தேர்வின் போது பயன்படுத்தப்பட்ட பழைய பணிச் சான்றிதழ்கள் இனி செல்லாது

புதிய விதிமுறை: 26.10.2026-க்குப் பின்னர் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உரிய கல்வித் துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட புதிய பணிச் சான்றிதழ் படிவத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதிய படிவத்தில் உள்ள எந்தவொரு விவரத்தையும் விண்ணப்பதாரர்கள் தன்னிச்சையாக மாற்றக் கூடாது. அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய அலுவலரின் கையொப்பம் மற்றும் சான்றொப்பம் பெற்று அப்படியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பழைய படிவத்தைப் பதிவேற்றினாலோ அல்லது புதிய படிவத்தின் வடிவமைப்பை மாற்றிப் பதிவேற்றினாலோ அந்த விண்ணப்பங்கள் உடனடியாகவும், எவ்வித முன்னறிவிப்புமின்றியும் நிராகரிக்கப்படும்.

அலுவலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இது தொடர்பாகத் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இந்த விவரங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து வட்டார மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளிலும் இந்த விபரங்களை ஒட்டி வைத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களின் வாழ்வாதாரத் தேர்வில் எவ்விதத் தவறும் நேராதிருக்க, இந்த 3 நாள் வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES