தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு! குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம்
Tamil Nadu auto fare new rates : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம். அரசிதழில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
Tamil Nadu auto fare new rates : 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கட்டண விகிதம் : தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கும் காண்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டண அரசாணைகளை முழுமையாக ரத்து செய்துவிட்டு, புதிய கட்டண விகிதங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆளுநர் உத்தரவு : மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 67-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் இந்த புதிய கட்டண விகிதங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக ஆளுநரின் உத்தரவின்படி உள்துறை முதன்மைச் செயலாளர் அரசிதழில் வெளியிட்டுள்ளார்.
குறைந்தபட்ச கட்டணம் மற்றும் கூடுதல் கட்டண விவரங்கள்
1. புதிய அரசாணையின்படி, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச பயண தூரம் 1.8 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. குறைந்தபட்ச கட்டணம்: முதல் 1.8 கி.மீ தூரத்திற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
3. கூடுதல் கட்டணம்: குறைந்தபட்ச தூரத்தைத் தாண்டிய பிறகு பயணிக்கும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.25 வசூலிக்கப்படும்.
4. காத்திருப்பு கட்டணம்: ஆட்டோ காத்திருக்கும் ஒவ்வொரு 1 நிமிடத்திற்கும் ரூ.1 வீதம் கட்டணம் கணக்கிடப்படும்.
அதாவது, ஆட்டோவில் பயணிப்பவர்கள் ஆரம்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்; அதன்பின்னர் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கூடுதலாக ரூ.25 வீதம் கட்டணம் உயரும்.
மலைப்பாதை மற்றும் இரவு நேர பயணக் கட்டணங்கள்
மலைப்பாங்கான பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தனிக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மலைப்பாதை கட்டணம்: வழக்கமான குறைந்தபட்ச கட்டணத்தை விட 1.2 மடங்கு அதிகமாக, அதாவது அடிப்படை கட்டணமாக ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தூரத்திற்கு கிலோமீட்டருக்கு ரூ.30 வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர கட்டணம்: இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பயணிக்கும் போது, சாதாரண நேரக் கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
விமர்சனங்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும்
எரிபொருள் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை ஏற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ள சூழலில், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், திடீரென குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும் கிலோமீட்டருக்கு ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டிருப்பது தினசரி அலுவலகம் செல்வோரிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து ஆட்டோக்களிலும் புதிய கட்டண அட்டவணை ஒட்டப்பட்டு, மீட்டர்கள் மறுசீரமைக்கப்படுவதை போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.