Trichy latest news : தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சிராப்பள்ளியில் "ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு வீதி" திட்டம் நவம்பர் 1-ஆம் தேதி நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அமைச்சர் ரமேஷ் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளார்கள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தந்தை பெரியார் கல்லூரி அருகில் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் “ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு வீதி" திட்டம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள், அண்மையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை ஒரே இடத்தில் குறைந்த விலையில் வழங்குவதுடன், தெருவோர உணவு விற்பனையை ஒழுங்கமைத்து, உணவுப் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் “ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு வீதி" (Healthy and Hygienic Food Street - HHFS) திட்டம், தமிழகத்திலேயே முதன்முறையாகத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2026 நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதல் தொடக்க விழா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியில் தந்தை பெரியார் கல்லூரி அருகிலுள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில், நவம்பர் 1-ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம், தெருவோர உணவு விற்பனைக்கென தனித்துவமான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சுகாதாரமான சூழல் உருவாக்கப்படுவதுடன், உணவு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக விண்ணப்பதார்களிடமிருந்து நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியான 39 உணவு வணிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு உணவு வகைகள் மற்றும் வணிகப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு சுவையான, தரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தேர்வு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் படி, உணவுப் பொருட்களை தயாரித்தல், சேமித்தல், கையாளுதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு உணவு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் தரம், பாதுகாப்பு, தூய்மையான குடிநீர் பயன்பாடு, சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும், பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், பொதுமக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவுகளை நியாயமான விலையில் ஒரே இடத்தில் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் அமைவதுடன், திருச்சிராப்பள்ளியின் உணவுக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் உணவுக் கூட வண்டிகளைப் பெற்று சுயதொழில் மேற்கொள்வதற்கு ஏதுவாக, மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் நிதி உதவி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 19 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வசதி மூலமும், 20 பயனாளிகளுக்கு மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாக மானியத்துடன் கூடிய திட்டங்களின் மூலமும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு வீதி திட்டம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உணவுக் கூட வண்டிகளுக்கு தனித்தனியாக மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கை கழுவும் வசதி, வடிகால் வசதி மற்றும் திட, திரவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூட வண்டிகளில் 9 வண்டிகளுக்கு சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்று எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உணவுக் கூட வண்டிகளை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, பொதுமக்கள் ஒரே இடத்தில் எளிதாகப் பணம் செலுத்தி உணவுப் பொருட்களை வாங்குவதற்காக ஒற்றை அட்டை பணப்பரிவர்த்தனை முறை (Single Card Payment System) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் தரமான உணவு வகைகளை இடத்தில் எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது ஏற்படுத்துகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட உள்ள இத்திட்டம், உணவுப் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதற்கும், தெருவோர உணவு விற்பனையை ஒழுங்கமைப்பதற்கும், உணவு வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் ஒரு முக்கியமான முன்னோடி முயற்சியாக அமைய உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.