Tamil Nadu Breakfast Scheme: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை' (Perunthalaivar Kamarajar Breakfast Scheme - PKBFS) விரிவுபடுத்துவதற்கு முன்னதாக, உணவு தயாரிப்பு, பணியாளர் நியமனம், சுகாதாரம், கண்காணிப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவை குறித்த சீரான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தினசரி செயல்பாட்டிற்கான கால அட்டவணையை இவ்வழிகாட்டுதல்கள் வரையறுக்கின்றன. இதன்படி, பின்வரும் அட்டவணை பின்பற்றப்பட வேண்டும்:
| நேரம் | விவரம் |
| சமையல் தொசக்கம் | காலை 6 மணிக்குச் சமையல் தொடங்கி 8 மணிக்குள் நிறைவடைய வேண்டும் |
| உணவு பரிமாறும் நேரம் | காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சூடான காலை உணவு பரிமாறப்பட வேண்டும் |
| சுத்தம் செய்யும் நேரம் | 9 மணிக்கு பிறகு சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பாத்திரங்களைச் சுத்தம் செய்துவிட்டு, காலை 9.30 மணிக்குள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். |
அரிசி, உப்பு, எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முக்கியப் பொருட்களை உள்ளூரில் கொள்முதல் செய்யக் கூடாது என்றும், அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்றும் இந்த நடைமுறைகள் கட்டாயமாக்குகின்றன.
காய்கறிகளை உள்ளூரில் வாங்கலாம் அல்லது பள்ளி அல்லது ஊராட்சிக்குச் சொந்தமான காய்கறித் தோட்டங்களில் பயிரிடலாம்.
10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்குத் தனி சமையலறை தேவையில்லை; அப்பள்ளிகளை அருகிலுள்ள பெரிய மையங்களுடன் இணைக்கலாம். இத்தகைய பள்ளிகளுக்கு உணவை விநியோகிக்கும் சுயஉதவிக் குழு உறுப்பினருக்கு விநியோகக் கட்டணமாக ரூ. 1,500 வழங்கப்படும்.
தரநிலைகளைப் பராமரிக்கும் பொருட்டு, பதிவேடுகளைத் தினமும் பராமரித்தல், இத்திட்டத்தின் அலைபேசி செயலி வாயிலாகப் புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையளித்தல், உணவு மாதிரிகளைப் பாதுகாத்தல், வழக்கமான ஆய்வுகள், சுயாதீன மதிப்பீடுகள் மற்றும் சமூகத் தணிக்கை ஆகியவற்றை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் நிலையில், சுகாதாரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.