TN By-Election TVK Candidates: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில, அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்தரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய 7 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இதில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளுக்கு மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நேற்று திமுக இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியல் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது தவெக வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது.
மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முறையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றபோதிலும், சில நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர், ஆளும் தவெகவில் இணைந்தனர். ராஜினாமா செய்த அதே தொகுதியில் இருவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது மதுராந்தகம். இத்தொகுதியின் தவெக வேட்பாளராக மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். மரகதம் குமரவேல் முதலில் அதிமுகவில் இருந்தார். அதிமுகவில் சார்பில் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்.
86,646 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் அப்போது அங்கம் வகித்த மதியம் வேட்பாளர் மல்லை சத்யாவை 3,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அவர் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் ராஜினாமா செய்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார்.
தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவர் 2026 நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவானார். 2026 தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். எம்எல்ஏவான சில நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்தார். தற்போது ராஜினாமா செய்த தாராபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.