தனியார் மயமாகும் மின் கட்டணக் கணக்கெடுப்பு - வரவேற்பும், எதிர்ப்பும்! Explained
Tamil Nadu electricity bill update : மின் கட்டணக் கணக்கீட்டில் தனியார் ஊழியர்கள் நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் மிகப் பெரிய மாற்றத்தை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கொண்டு வரவுள்ளது. துல்லியமற்ற கணக்கீடுகள், தாமதங்கள் மற்றும் அதன் காரணமாகப் பொதுமக்களுக்கு அதிக மின்கட்டணம் வருவதைத் தடுக்கும் நோக்கில், அவுட்சோர்சிங் மூலம் மீட்டர்களைக் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பின்னணி, புதிய விதிகள், அபராத முறைகள் மற்றும் சாதக–பாதகங்கள் குறித்த விரிவான விளக்கம் இதோ:
1. இந்த முடிவுக்கு என்ன காரணம்?
பணியாளர் பற்றாக்குறை: தமிழ்நாட்டில் சுமார் 2.5 கோடி வீட்டு உபயோக இணைப்புகள் உட்பட மொத்தம் 3.5 கோடி தாழ்வழுத்த மின் இணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்த இணைப்புகளுக்கு ரீடிங் எடுத்து பில் வழங்க 7,565 கணக்கீட்டாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது பணியில் இருப்பது வெறும் 3,063 பேர் மட்டுமே. கிட்டத்தட்ட 60% பணியிடங்கள் (4,502 இடங்கள்) காலியாக உள்ளன. இதுவரை ஓய்வுபெற்ற TNEB ஊழியர்களுக்கு ஒரு மதிப்பீட்டிற்கு ரூ.5 ஊதியமாக வழங்கி இப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் ஊழியர் பற்றாக்குறையால் குறிப்பிட்ட நாள்களில் ரீடிங் எடுக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் அடுத்தடுத்த கட்டண அடுக்குக்கு மின் பயன்பாடு சென்று, பொதுமக்களுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் கட்டணம் வரும் அவல நிலை நீடித்து வந்தது.
2. புதிய தனியார் ஒப்பந்த முறை எப்படிச் செயல்படும்?
6 மாத கால டெண்டர்: கூடுதல் பணியாளர்களை நியமிக்க TNPDCL செயற்பொறியாளர்கள் 6 மாத காலத்திற்கு லிமிடெட் டெண்டர் விட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள்.
கல்வித் தகுதி: ஒப்பந்த ஊழியர்களாகப் பணிபுரிபவர்கள் குறைந்தபட்சம் ஒரு டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கு TNPDCL சார்பில் உரிய பயிற்சி அளிக்கப்படும்.
தொழில்நுட்பப் பயன்பாடு: வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மொபைல் ஆப் (Mobile App), ஆப்டிகல் ப்ரோப் (Optical Probe) அல்லது புளூடூத் டிரான்ஸ்மிட்டர் வழியாக துல்லியமாக ரீடிங் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. தினசரி கணக்கீட்டு இலக்குகள்:
ஒப்பந்தப் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் எடுக்க வேண்டிய கணக்கீடுகளின் எண்ணிக்கை பகுதிவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
சென்னை மாநகராட்சி: ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 250 இணைப்புகள்
இதர மாநகராட்சிகள்: நாள் ஒன்றுக்கு 220 இணைப்புகள்
நகராட்சிகள்: நாள் ஒன்றுக்கு 200 இணைப்புகள்
பேரூராட்சிகள்: நாள் ஒன்றுக்கு 180 இணைப்புகள்
ஊரகப் பகுதிகள்: நாள் ஒன்றுக்கு 110 இணைப்புகள்
மலைப் பகுதிகள்: நாள் ஒன்றுக்கு 80 இணைப்புகள்
4. கடுமையான கட்டுப்பாடுகளும் அபராதமும்:
மின் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய TNPDCL சில கடுமையான விதிகளையும் இழப்பீட்டு முறையையும் வகுத்துள்ளது:
ஒரே நாள் தாமதம்: உரிய பில்லிங் சுழற்சியில் அதிகபட்சமாக 1 நாள் மட்டுமே தாமதிக்க அனுமதி உண்டு.
தாமதக் கட்டணம்: மீட்டரைக் கணக்கிடுவதில் தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு மீட்டர் ரீடருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.200 அபராதம்/இழப்பீடு விதிக்கப்படும்.
முழுக் கட்டணம் விடுவிக்க நிபந்தனை: குறிப்பிட்ட பில்லிங் சுழற்சியில் 100% கணக்கீட்டுப் பணிகளையும் முழுமையாக முடித்த பிறகே ஒப்பந்த நிறுவனத்திற்குப் பணம் வழங்கப்படும்.
தவறான கணக்கீட்டுக்கு அபராதம்:
ஒரு மாதத்தில் 10 தவறுகள் வரை: தவறு ஒன்றுக்கு ரூ.50 அபராதம்.
10 முதல் 20 தவறுகள்: தவறு ஒன்றுக்கு ரூ.100 அபராதம்.
20-க்கும் மேற்பட்ட தவறுகள்: தவறு ஒன்றுக்கு ரூ.200 அபராதம்.
திருப்திகரமாகச் செயல்படாத ஓய்வுபெற்ற பணியாளர்கள் விடுவிக்கப்படுவர்.
5.வரவேற்பும் எதிர்ப்பும்:
நுகர்வோர் வரவேற்பு: இந்த நடவடிக்கையை நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். களத்திற்குச் செல்லாமல் தோராயமாக ரீடிங் குறிக்கும் முறை இதன்மூலம் முடிவுக்கு வரும் என்றும், தாமதமின்றி சரியான தேதியில் ரீடிங் எடுப்பதால் ஸ்லாப் உயர்ந்து மின்கட்டணம் அதிகமாவதைத் தடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
தொழிற்சங்க எதிர்ப்பு: இந்த நடவடிக்கைக்கு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்குப் பொறுப்புணர்வு இருக்காது என்றும், இதனால் மீண்டும் 'டேபிள் ரீடிங்' முறையே அதிகரிக்கும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், உரிய நோட்டீஸ் வழங்கி தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்காமல் தனியாரிடம் ஒப்படைப்பதாகக் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு
சென்னை மாநகரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் மூலம் அமர்த்தப்படும் பணியாளர்களைக் கொண்டு மின் பயன்பாடு கணக்கிடப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது. நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து ஒப்பந்தப் பணி முறையை ஊக்குவிக்கும் இந்த சமூகநீதிக்கு எதிரான அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மின்பயன்பாட்டுக்கான கட்டணம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. வீடுகளுக்கான மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கீடு சரியான நாள்களில் மேற்கொள்ளப்படாதது தான் இதற்கு காரணம் என்று தெரியவந்தது. மின்சார வாரியத்தின் சார்பில் இந்த கணக்கீடுகளை மேற்கொள்ள போதிய மனிதவளம் இல்லை என்பதால் அடுத்த 6 மாதங்களுக்கு இந்தப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்து மேற்கொள்ளலாம் என்றும், இந்த ஒப்பந்தங்களை மண்டல அளவில் செய்து கொள்ளலாம் என்று மின்வாரியத்தின் வருவாய் பிரிவு செப்டம்பர் 24 ஆம் தேதி மண்டல பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரப் பயன்பாட்டை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தாமதத்திற்கு போதிய பணியாளர்கள் இல்லாதது தான் காரணம் என்பதில் ரகசியம் எதுவும் இல்லை. இந்த சிக்கலுக்கான தீர்வு காலியாக உள்ள மின் கணக்கீட்டாளர் மற்றும் வருவாய் பிரிவு பணியிடங்களை நிரப்புவது தான். மின்சார வாரியத்தில் உள்ள 7590 கணக்கீட்டாளர் பணியிடங்களில், 73.81%, அதாவது 5,602 பணியிடங்கள் காலியாக உள்ளன. வருவாய்ப் பிரிவு பணியிடங்களையும் சேர்த்தால் மொத்தமுள்ள 14,804 பணியிடங்களில், 7119 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுமட்டுமின்றி, மின் கணக்கீட்டு ஆய்வாளர் நிலையிலும், மொத்தமுள்ள 3,976 பணியிடங்களில் 1,073 காலியாக உள்ளன.
தவெக அரசு நினைத்திருந்தால், பொறுப்பேற்ற நாளில் இருந்து இப்போதைக்குள் இந்த காலியிடங்களை நிரப்பியிருக்க முடியும். காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இப்போது தொடங்கினால் கூட அதிகபட்சமாக 3 மாதங்களில் நிறைவு செய்து விட முடியும். ஆனால், அதை செய்யாமல் இந்த பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் நோக்கம், இந்தப் பணியிடங்களை ஒழித்து விட்டு, ஒப்பந்த பணியிடங்களை ஏற்படுத்துவது தான். அடுத்த 6 மாதங்களுக்கு மட்டும் தான் இந்த நடைமுறை என்று மின்வாரியத் தரப்பில் கூறப்பட்டிருந்தாலும் கூட, அது உண்மையல்ல. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நிரந்தரப் பணியாளர்களுக்கு மாற்றாக ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதில் உள்ள அநீதிகள் குறித்து தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறேன். நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகத் தான் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அதிலும் ஒரு பங்கு ஒப்பந்தப் பணியாளர்களை அனுப்பும் தனியார் மனிதவள நிறுவனங்களுக்கு சென்று விடும். அந்த வகையில் இந்த வகை பணி நியமனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உடல் உழைப்பை சுரண்டுகின்றன.
இரண்டாவதாக, ஒப்பந்தப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. மின்சார வாரியத்தில் மின்சாரக் கணக்கீடு தொடர்பான பணிகளில் மட்டும் 8,192 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்பட்டால், குறைந்தபட்சம் 69%, அதாவது 5652 வேலைவாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் முன்னேற்றம் பெறும். இது தான் சமூகநீதி ஆகும். ஆனால், ஒப்பந்த முறை பணி நியமனங்கள் உழைப்பு சுரண்டலுக்கே வழி வகுக்கும்.
மூன்றாவதாக, நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு மின்சாரப் பயன்பாட்டை கணக்கிடும் போது, அதில் ஏதேனும் தவறுகள் நடந்தால், அதற்கு அவர்களை பொறுப்பாக்க முடியும். ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு பொறுப்புடைமை கிடையாது என்பதால், அதற்கு அவர்களை பொறுப்பாக்க முடியாது. இதனால், அளவுக்கு அதிகமாக மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படும் சிக்கல் மேலும் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறையாது.
2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், அவர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று வாக்குறுதி (வாக்குறுதி எண்: 2(எச்)3) அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களில் 90%க்கும் மேற்பட்டோர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், அதை விடுத்து, மீண்டும், மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது சமூகநீதியோ, மனித உரிமையோ அல்ல.
சமூகநீதி தான் தங்களின் உயிர்மூச்சுக் கொள்கை என்று முதலமைச்சர் விஜய் அவர்களும், தவெகவும் திரும்பப் திரும்ப கூறி வருகின்றன. நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து விட்டு, ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பது தான் சமூகநீதியா? என்று மக்கள் வினா எழுப்புகின்றனர். தவெக தலைமையிலான அரசு, சமூக நீதியைக் காக்கும் அரசு என்பதை செயல்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும். அதற்காக, மின் கணக்கீட்டளர் பணிக்கு ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் முடிவை கணக்கிட்டு, அனைத்து காலியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.