SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசு: 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!

Tamil Nadu Government Free Power Connections : விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசாக 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்

Written By Karthikeyan Sekar
Published: Oct 24, 2026, 02:05 PM IST | Updated: Oct 24, 2026, 02:10 PM IST
Join

தமிழகத்தில் பாசன நீர் வசதியை உறுதி செய்து, விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2026-2027 ஆம் நிதியாண்டிற்குள் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்க அதிகாரப்பூர்வ அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மின் இணைப்பு கோரி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கை மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.  

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் செலவின விவரமும்

இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காகப் பல நூறு கோடி ரூபாயை அரசு மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஒதுக்கீடு செய்துள்ளன. விவசாயிகளுக்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஏற்படும் தொடர் செலவினமாக ரூ. 127.56 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு இணைப்புக்கு சராசரியாக 6.5 குதிரைத்திறன் கணக்கில், குதிரைத்திறன் ஒன்றுக்கு ஆண்டிற்கு ரூ. 3,925 வீதம் கணக்கிடப்பட்டு, இந்த முழுத் தொகையையும் அரசே மானியமாக மின் பகிர்மானக் கழகத்திற்கு நேரடியாக வழங்கும்.  

அதேபோல், புதிய மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் பாதைகள் அமைப்பதற்காக ஆகும் தொடர் அல்லாத மூலதனச் செலவினமாக சுமார் ரூ.750 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய விவசாய மின் இணைப்பை ஏற்படுத்த தோராயமாக ரூ.1.5 லட்சம் செலவாகும் நிலையில், மொத்தமுள்ள 50,000 இணைப்புகளுக்கான இந்த ரூ.750 கோடி செலவை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகமே முழுமையாக ஏற்கவுள்ளது.  

யாருக்கெல்லாம் முன்னுரிமை? விரிவான பங்கீடு விவரம்

இந்த 50,000 புதிய மின் இணைப்புகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் சமச்சீராகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன:  

சாதாரணப் பிரிவு (இலவசம்): பொதுவான காத்திருப்போர் பட்டியலில் இருந்து சுமார் 16,785 விவசாயிகளுக்கு இந்த முறையில் முற்றிலும் இலவசமாக மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.  

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC/MBC/DNC) சிறப்பு ஒதுக்கீடு: இந்தத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க ஒரு சிறப்பு நடவடிக்கையாக முதல்முறையாக 3,215 புதிய இலவச மின் இணைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

சுயநிதித் திட்டம் (RSFS - கட்டண முறை): ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்காக ரூ. 10,000 கட்டணத்தில் 21 இணைப்புகளும், ரூ. 25,000 கட்டணத்தில் 880 இணைப்புகளும், ரூ.50,000 கட்டணத்தில் 2,471 இணைப்புகளும் என மொத்தம் 3,372 இணைப்புகள் தயார் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.  

அரசு நலத்திட்டங்கள் (கட்டண முறை): பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் 1,346 இணைப்புகள் அளிக்கப்படவுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு முன்னுரிமைப் பிரிவுக்கு 350 இணைப்புகளும், தாட்கோ திட்டத்தின் கீழ் 99 இணைப்புகளும், நீர்வள பாதுகாப்பு மற்றும் பாசன மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 247 இணைப்புகளும், புதிய திட்டங்களுக்கு 300 இணைப்புகளும் மற்றும் அரசு விதை பண்ணைகள், சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைகளுக்கும் தேவையான இணைப்புகள் அடங்கும்.  

தட்கல் விரைவு சுயநிதித் திட்டம்: கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெறத் தயாராக காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதிகபட்சமாக 25,282 இணைப்புகள் விரைவு தட்கல் முறையில் வழங்கப்பட உள்ளன.  

ஏற்கனவே வழங்கப்பட்ட இணைப்புகளுக்கான ஏற்பு

கடந்த ஏப்ரல் 1, 2026 முதல் செப்டம்பர் 21, 2026 வரையிலான காலகட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக ஏற்கனவே 7,313 மின் இணைப்புகள் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் அவற்றுக்கு அரசு பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த 7,313 இணைப்புகளும் சேர்த்து மொத்த இலக்கான 50,000 எண்ணிக்கைக்குள் முறைப்படுத்தப்பட்டு, எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து புதிய இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES