கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசு! போனஸ் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
Tamil Nadu Government, Diwali Bonus : 74,000 கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படி 10% அதிரடி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Government, Diwali Bonus : தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மிக முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாகப் பணிபுரிந்து வரும் சுமார் 74,000 நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி அதிகாரப்பூர்வமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பு அமல்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற 2026–27 ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலியில் 10 விழுக்காடும், அகவிலைப்படியில் 10 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பைத் தற்போது அரசு அரசாணையாக வெளியிட்டு உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
முன்தேதியிட்டு அமல்: யாருக்கு எவ்வளவு உயர்வு?
அரசாணையின்படி, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2026–27 ஆம் ஆண்டிற்கு:
1. நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அடிப்படைக் கூலியில் 10 விழுக்காடு உயர்வு வழங்கப்படுகிறது.
2. அகவிலைப்படியில் 10 விழுக்காடு (185%) உயர்வு வழங்கப்படுகிறது.
3. இந்த இரட்டை ஊதிய உயர்வும் கடந்த 01.09.2026 முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
4. இந்த நடவடிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த சுமார் 74,000 கைத்தறி நெசவாளர்கள் நேரடிப் பொருளாதாரப் பலனைப் பெறுவார்கள்.
அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
இதனிடையே, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பையும் தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மின்வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்களைத் தொடர்ந்து, தற்போது நலிவடைந்த கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கும் இரட்டை ஊதிய உயர்வை முன்தேதியிட்டு அறிவித்திருப்பது நெசவாளர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.