Tamil Nadu Government Employees Alert: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விமர்சிக்கக் கூடாது என வலியுறுத்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மிக முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973, விதி 12-ஐ சுட்டிக்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் இயக்குநர் சோமசுந்தரம், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் அரசை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமீபகாலமாக முகநூல், வாட்ஸ்அப், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அரசு ஊழியர்கள் சிலர் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவிடுவதும், துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பதும் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், நடத்தை விதிகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த ஆணை அமலுக்கு வந்துள்ளது.
அரசு ஊழியர்கள் பொதுவெளியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இச்சுற்றறிக்கையில் பின்வரும் முக்கிய விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன:
அரசின் கொள்கைகளை விமர்சிக்கத் தடை: அரசு ஊழியர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ பாதகமாக எக்காரணம் கொண்டும் விமர்சிக்கக் கூடாது.
சமூக வலைதளங்கள் மற்றும் மீம்ஸ்களுக்குக் கட்டுப்பாடு: இதில் ஊடகங்கள் என்பது வெறும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை மட்டும் குறிக்காமல் நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ்கள் போன்றவை மற்றும் பொதுக்கூட்டங்களையும் உள்ளடக்கியதாகும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற அரசுகளுடனான நல்லுறவு: பிற மாநில அல்லது மத்திய அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது.
விமர்சனக் கூட்டங்களில் பங்கேற்கத் தடை: அரசுக்கு எதிராக அல்லது அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் அல்லது உரைகள் நிகழ்த்தப்படும் அலுவல் சாராத எந்தவொரு கூட்டங்களிலும் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது.
இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மேற்கண்ட விதிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிகளுக்கு மாறாக எவரேனும் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலானது அனைத்து சார்நிலை அலுவலகங்களுக்கும், அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நேரடித் தகவலுக்காகவும் தொடர் கண்காணிப்புக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.