Tamil Nadu Government : தமிழ்நாட்டில் இளம் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான இலவச எச்பிவி (HPV) தடுப்பூசி முகாம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. 14 வயதுடைய சிறுமிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ ஆணை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொது சுகாதார மாவட்டங்களிலும் 28.02.2026 முதல் 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் கருப்பை வாய்ப் புற்றுநோய் எதிர்ப்புத் தடுப்பூசியானது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. பெண் குழந்தைகளின் எதிர்கால சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தப்போது ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
தகுதியுடைய சிறுமிகளுக்குத் தடுப்பூசி போடும் பணி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்க்கண்ட நேரங்களில் நடைபெறும்:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்: காலை 9:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை.
இந்த இலவச தடுப்பூசியினைச் சிறுமிகளுக்குச் செலுத்துவதற்குப் பெற்றோரின் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிடுவது மட்டுமே போதுமானது. இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய (PHC) ஊழியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். அவர்கள் தகுதியுடைய 14 வயது சிறுமிகளை முறையாகக் கண்டறிந்து, திட்டமிட்ட நாளில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்வார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.4,000 வரை செலவாகும் இந்த எச்பிவி (HPV) தடுப்பூசியை அரசு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. எச்பிவி தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது மட்டுமின்றி, பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை மிகச் சிறந்த முறையில் தடுக்கும் திறன் கொண்டது.
எனவே, பெற்றோர் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்கள் மகள்களுக்கு ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட்டு தடுப்பூசி செலுத்தி, அரசின் இச்சேவைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.