SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விதிமீறல் கட்டிடங்களுக்கு இனி பூட்டு, சீல் மற்றும் இடிப்பு! தமிழ்நாடு அரசு அதிரடி சுற்றறிக்கை Explained

Tamil Nadu Government : விதிமீறல் கட்டிடங்களை இடிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 21, 2026, 07:18 IST | Updated: Nov 21, 2026, 07:23 IST
Image Credit: Tamil Nadu Government illegal buildings Rules
Join

Tamil Nadu Government : தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தை மீறி கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் அனுமதியற்ற கட்டிடங்கள் மீது எவ்வித காலதாமதமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதமாக, நகராட்சி நிர்வாக இயக்குநர், மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.  

மேலும் படிக்க | மின் ஊழியர்களுக்குத் தமிழக அரசு கொடுத்த ஜாக்பாட்! கிராஜுவிட்டி ரூ.25 லட்சமாக உயர்வு

உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னணி

லோகநாதன் vs தமிழ்நாடு அரசு மற்றும் others என்ற வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 09.07.2026 மற்றும் 04.08.2026 ஆகிய தேதிகளில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்டங்களைக் கண்டிப்பாகச் செயல்படுத்தவும், விதிமீறல் கட்டுமானங்களைத் தடுக்கவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனடிப்படையில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளர் (தொழில்நுட்பம்) அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, 20.11.2026 தேதியிட்ட இந்த முக்கியச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

மாதந்தோறும் கட்டாயக் கள ஆய்வு மற்றும் பதிவேடு பராமரிப்பு

இந்த புதிய உத்தரவின்படி, கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கள மற்றும் பகுதி அதிகாரிகள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று, அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படிதான் பணிகள் நடக்கின்றனவா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.  

ஆய்வின் போது கண்டறியப்படும் விவரங்களைப் பதிவு செய்வதற்காக, ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் பிரத்யேகமாக 'ஆய்வுப் பதிவேடு' ஒன்று பராமரிக்கப்பட வேண்டும். அந்தப் பதிவேட்டில் கட்டிட அனுமதி எண் மற்றும் தேதி, கட்டுமான இடம், விண்ணப்பதாரர் அல்லது கட்டுமான நிறுவனத்தின் பெயர், மாதாந்திர ஆய்வு செய்யப்பட்ட தேதி, கட்டுமானத்தின் தற்போதைய நிலை, ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அதன் விவரங்கள் மற்றும் ஆய்வு செய்த அதிகாரிகளின் கையொப்பம் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கை: பூட்டு, சீல் மற்றும் இடிப்பு

மாதாந்திர ஆய்வின் போதோ அல்லது பொதுமக்களின் புகார்கள் மூலமாகவோ அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் விதிமீறல் அல்லது அனுமதியற்ற கட்டுமானம் இருப்பது தெரியவந்தால், எவ்வித காலதாமதமும் நடைமுறைச் சிக்கல்களும் இன்றி உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசாணைகளில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி கறாராக மேற்கொள்ளப்பட வேண்டும்.  

குறிப்பாக, விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாதியிலேயே நின்றுவிடாமல், அதன் இறுதி இலக்கை எட்டும் வகையில் விரைவாக முடிக்கப்பட வேண்டும். அதாவது, அனுமதியின்றி கட்டப்பட்ட அல்லது விதிமீறல் உள்ள கட்டிடப் பகுதிகளுக்குப் பூட்டு மற்றும் சீல் வைப்பது அல்லது அவற்றை முழுமையாக இடித்து அகற்றுவது வரை நடவடிக்கைகள் தொடர வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆணையர்களின் கண்காணிப்பும் மாதாந்திர அறிக்கையும்

அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களும் தங்கள் அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆய்வுப் பதிவேடுகளைத் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். மேலும், இந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய ஆணையர்களே திடீர் கள ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.  

ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் எவ்விதத் தவறுமின்றி 'நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை' நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அறிக்கையில், வரைபட அனுமதி பெற்று ஆய்வு செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, பராமரிக்கப்படும் பதிவேடுகளின் எண்ணிக்கை, சட்ட விதிகளின் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ்களின் எண்ணிக்கை மற்றும் இறுதிக்கட்ட நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் விவரங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவை ஒருங்கிணைக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.  

அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

இந்த அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவதில் எவ்வித தாமதமோ அல்லது அலட்சியமோ காட்டப்பட்டால், அது மிகவும் தீவிரமாகக் கருதப்படும் என நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரித்துள்ளார். விதிமீறல்களைத் தடுக்கத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மற்றும் கள ஆய்வுப் பணியாளர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்பு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

தமிழக அரசின் இந்தக் கடுமையான நடவடிக்கையால், அனுமதி பெற்ற திட்டத்தை விடக் கூடுதலாக மாடிகள் கட்டுவது, கட்டிடத்தைச் சுற்றி விட வேண்டிய கட்டாய இடைவெளியை விடாமல் கட்டுவது, வாகன நிறுத்துமிடங்களை வணிகக் கடைகளாக மாற்றுவது மற்றும் குடியிருப்பு வீடுகளை அனுமதியின்றி வணிகக் கட்டிடங்களாக மாற்றுவது போன்ற விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதன் மூலம், அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு ஏற்படும் இயற்கை வெளிச்சம், காற்றோட்டம், வாகன நிறுத்துவதில் ஏற்படும் நெரிசல் மற்றும் தீ பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES