தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்! பெண்கள் ரூ.25 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu Government Business Loan Scheme : டாப்செட்கோ மூலம் பெண்கள் 25 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற்று சொந்தமாக தொழில் தொடங்கலாம். இந்த லோன் பெறுவது எப்படி? யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government Business Loan Scheme : தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பெண்களை தொழில் முனைவோராக்கும் நோக்கில் 25 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் இதுவரை 13,143 பேர் கடனுதவி பெற்றுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் TABCEDCO மூலமாக ரூ.9377.93 லட்சம் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இத்திட்டத்தில் இதுவரை கடன் பெறாதவராகவும், தொழில் தொடங்கும் ஆர்வத்திலும் இருப்பவராக இருப்பின், கடன் பெற இப்போதுகூட விண்ணப்பிக்கலாம். டாப்செட்கோ கடனுதவி பெறுவது எப்படி, அதற்கான விதிமுறைகள், தேவையான ஆவணங்கள், தகுதிகள் உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை : புதிய விண்ணப்பம் - அரசு கொடுத்த ஷாக் அப்டேட்!
டாப்செட்கோ தனிநபர் கடன்பெறுவதற்கான விதிமுறைகள்
- விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
என்னென்ன தொழில்கள் செய்யலாம்? கடன் விவரம்
இத்திட்டத்தின் கீழ் சிறுவர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.ரூ.1.25 லட்சம் வரை 7 விழுக்காடு, ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15.00 லட்சம் வரை 8 விழுக்காடு ஆண்டு வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - அரசு அதிரடி அறிவிப்பு
மகளிர் சுய உதவிக்குழு கடன்
குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் வரையும் ஆண்டிற்கு 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருபாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கான கடன்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7 விழுக்காடு. திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
விண்ணப்பிப்பது எப்படி?
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.tabcedco.tn.gov.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் சமர்பிப்பு
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டு (Ration Card), ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
டாப்செட்கோ (TABCEDCO) கடன் உதவி: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சொந்த தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. குறைந்த வட்டியில் வழங்கப்படும் இக்கடனை பெறத் தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன? முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்