Tamil nadu Government latest Update : தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், உயர்கல்வித்துறையில் மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. வழக்கமான பாடத்திட்டங்களோடு நின்றுவிடாமல், தொழிற்துறைக்குத் தேவையான நேரடிப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும் ஒரு பட்டம், ஆறு திறன்கள் என்ற புதிய வேலைவாய்ப்பு சார்ந்த திட்டம் வரும் 2027 ஜனவரி மாதம் தொடங்க உள்ள இரட்டைப் பருவத்தில் இருந்து தீவிரமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் "பருவத்திற்கு ஒரு திறன்" என்ற பெயரில் ஆலோசிக்கப்பட்ட இந்த முன்முயற்சி, தற்போது விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர், தனது ஆறு பருவங்களிலும் தலா ஒரு புதிய தொழிற்துறைத் திறனைக் கட்டாயமாகப் பயில்வார். இதன் மூலம் மூன்று ஆண்டுகளின் முடிவில், அந்த மாணவர் தனது முதன்மைப் பட்டத்துடன் சேர்த்து, வேலைவாய்ப்பை உடனடியாகப் பெற்றுத்தரும் ஆறு கூடுதல் நடைமுறைத் திறன்களையும் கைவசம் கொண்டிருப்பார்.
இந்தத் திட்டம் ஏதோ ஒரு சில கல்லூரிகளில் மட்டும் சோதனைக் களமாகத் தொடங்கப்படவில்லை. மாறாக, தமிழகம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் அமல்படுத்தப்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 1.30 லட்சம் இளங்கலை இடங்கள் உள்ள நிலையில், 2026-27 கல்வியாண்டில் மட்டும் இதுவரை 96,477 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான அரசு கல்லூரி மாணவர்கள் நேரடியாகப் பலனடைவர்.
கலை மற்றும் அறிவியல் துறைகளை உள்ளடக்கி முதற்கட்டமாக 20 அதிநவீன வேலைவாய்ப்புப் படிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் இருந்து தங்கள் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற படிப்புகளை அந்தந்தக் கல்லூரிகள் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு திறன் படிப்பும் 30 முதல் 45 மணிநேர நேரடிப் பயிற்சிகளைக் கொண்டிருக்கும். இதில் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், மாணவர்களுக்கு வழக்கமான தியரி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது. மாறாக, மாணவர்களின் செயல்முறைத் திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்:
40% மதிப்பெண்கள்: நேரடித் திறன் பயிற்சிகள் மற்றும் செய்முறைப் பணிகளுக்கு.
30% மதிப்பெண்கள்: மாணவரின் தனிப்பட்ட திறமை மற்றும் ஈடுபாட்டிற்கு.
30% மதிப்பெண்கள்: இறுதி செயல்முறை விளக்கம் மற்றும் நேரடி தயாரிப்புகளுக்கு.
கல்விக்கூடங்களுக்கும் தொழிற்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு அரசு கல்லூரியும் தங்கள் பகுதியில் உள்ள குறைந்தபட்சம் மூன்று முன்னணி தொழிற்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்தத் துறைக்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பாடத்திட்ட மேம்பாட்டில் உதவுவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்யும்.
திட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்குவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், கல்லூரிகளுக்குத் தேவையான தொழில்முறைப் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளும், புதிய கல்வி முறைக்கு பேராசிரியர்களைத் தயார்படுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் (TANSCHE) சார்பில் பேராசிரியர்களுக்கு 'விளைவு சார்ந்த கல்வி' (Outcome-Based Education) குறித்த சிறப்புப் பயிற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அரசு கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு சதவிகிதத்தை பல மடங்கு உயர்த்தும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.