தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், வங்கி இருப்பு, வாங்கிய கடன்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அரசின் பிரத்யேக ‘களஞ்சியம்’ இணையதளத்தில் கட்டாயமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையில், ஒவ்வொரு பிரிவின் கீழும் மிக விரிவான தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர் பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோ உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தனி வீடு குறித்து 19 வகையான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன:
நிலத்தின் பரப்பளவு, பிரிக்கப்படாத நில உரிமைப் பங்கு (UDS - சதுர அடியில்), மாநிலத்தின் பெயர், வருவாய் மாவட்டம், வருவாய் வட்டம் (தாலுகா, வருவாய் கிராமம், நில அளவை எண் (சர்வே எண்), உட்பிரிவு எண் , சொத்தில் உள்ள உரிமையின் அளவு / பங்கு, சொந்த வருமானத்தில் வாங்கி, வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?, சொத்தைப் பெற்ற / வாங்கிய தேதி, சொத்தைப் பெற்ற வழிமுறை (கிரயம் / பூர்வீகம் / தானம் / உயில் போன்றவை)
* சொத்தை வழங்கிய நபரின் முகவரி
* சொத்து அளித்த நபருடன் அரசு ஊழியருக்கு ஏதேனும் தொடர்பு அல்லது உறவு உள்ளதா?
* சொத்தின் தற்போதைய மதிப்பு
* சொத்து வாங்குவதற்கான வருமானத்தின் ஆதாரம்
* சொத்து வாங்க அனுமதி அளித்த அதிகாரி மற்றும் அனுமதி உத்தரவு விவரங்கள் (பொருந்தினால்)
* அந்த அசையாச் சொத்தின் மூலம் கிடைக்கும் மொத்த ஆண்டு வருமானம் (வாடகை உள்ளிட்டவை)
முக்கிய நிபந்தனை: இந்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் 1 MB அளவுக்குள் PDF கோப்பாக மட்டுமே போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விவசாய நிலங்கள் மற்றும் காலி மனைகள் வைத்திருப்பவர்கள் அதற்கென உள்ள படிவத்தில் கீழ்க்கண்ட 18 விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
1. நிலத்தின் வகை: நன்செய் நிலம் (நீர்ப்பாசன வசதியுள்ளது), புன்செய் நிலம் (மானாவாரி), குடியிருப்பு நிலம் அல்லது வீட்டுமனை.
2. நிலத்தின் பரப்பளவு, மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம்.
3. சர்வே எண், உட்பிரிவு எண் மற்றும் சொத்தில் உள்ள உரிமையின் அளவு.
4. சொந்த வருமானத்தில் வாங்கி மற்றவர் பெயரில் உள்ளதா என்ற விவரம்.
5. வாங்கிய தேதி, வழிமுறை, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, அவரது முகவரி மற்றும் ஊழியருடனான தொடர்பு.
6. நிலத்தின் மதிப்பு, வருமான ஆதாரம், துறை அனுமதி விவரங்கள் மற்றும் நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம்.
7. இந்நிலங்களுக்கான பட்டா, பத்திர ஆவணங்களையும் 1 MB அளவுக்குள் PDF ஆக பதிவேற்ற வேண்டும்.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசமுள்ள அசையும் சொத்துக்கள் குறித்த விவரங்களும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன:
PART-1: வங்கி சேமிப்பு இருப்பு, உறுதிப் பத்திரங்கள், ரொக்கப் பணம், மற்றும் வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு நிதி
PART-2: நகைகள் / தங்க ஆபரணங்கள், பிறருக்கு வழங்கிய கடன்கள் அல்லது முன்பணங்கள், மூலதனப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை பங்குகள்.
PART-3: கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள்.
* சொத்து பெறப்பட்ட நபர் / வங்கி / நிதி நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி.
* சொத்தின் மொத்த மதிப்பு.
* சொந்த வருமானத்தில் வாங்கி பிறர் பெயரில் வைக்கப்பட்டுள்ளதா?
* வருமானத்தின் ஆதாரம்.
* இச்சொத்துக்கள் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.
சொத்துக்கள் மட்டுமின்றி, ஊழியர்கள் வாங்கியுள்ள கடன்களையும் மறைக்க முடியாது. அரசு ஊழியர்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பிற கடன்கள் குறித்த விவரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்:
- கடன் வழங்கிய வங்கி அல்லது நபரின் பெயர் மற்றும் முகவரி.
- கடன் பெறப்பட்டதற்கான காரணம், மொத்தக் கடன் தொகை மற்றும் வட்டி விகிதம்.
- கடன் பெறப்பட்ட நாள் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம்.
- தற்போதைய நிலையில் நிலுவையில் உள்ள கடன் தொகை.
- அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை:
ஊழியர்கள் தங்களது சொந்த பெயரில் மட்டுமின்றி, தங்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள், வங்கி வைப்புத் தொகை, நகைகள், முதலீடுகள் மற்றும் வாங்கிய கடன்கள் என அனைத்தையும் எந்தவொரு தகவலையும் மறைக்காமல் ‘களஞ்சியம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல்களைப் பதிவேற்றினாலோ அல்லது சொத்து விவரங்களை மறைத்தாலோ துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பதால் அரசு ஊழியர்கள் மத்தியில் இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.