தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் ஜாக்பாட்: 20% மானியத்துடன் கடனுதவி
Tamil Nadu Government Yetram scheme : தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் சிறு தொழில் தொடங்க ரூ.10,000 வரை அரசு மானியம் வழங்கும் ‘ஏற்றம்’ திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
Tamil Nadu Government Yetram scheme : தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொழில்முனைவோராக மாற்றுவதற்கும் தமிழ்நாடு அரசு 'ஏற்றம்' என்ற புதிய வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சிறு தொழில் மற்றும் மாற்றுத் தொழில்களைத் தொடங்குவதற்கு வங்கிக் கடனுடன் 20 சதவீத மானிய உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு சமூக நீதித்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை விதிமுறையில் வரப்போகும் முக்கிய மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் 2026–2027-ஆம் ஆண்டிற்கான சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கையின் போது, தூய்மைப் பணியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'ஏற்றம்' திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரை சொந்தமாகத் தொழில் செய்யும் தொழில்முனைவோராக மாற்றும் உயரிய நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதமாக, சமூக நீதித் துறையின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3,051 பயனாளிகளுக்கு கடனுதவி மற்றும் மானியம் வழங்குவதற்காக மொத்தம் ரூ.3,05,10,000 நிதியை மானியமாக விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் மானிய விவரம்
'ஏற்றம்' தூய்மைப் பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டமானது, குடும்பத்தினர் வருவாய் ஈட்டும் வகையிலான சுயதொழில்களை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
20 சதவீத அரசு மானியம்: இத்திட்டத்தின் கீழ் நுண்கடன் உதவி பெறும்போது, அதில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000/- வரை அரசு மானியமாக நேரடியாக வழங்கப்படும்.
குழுவாகவோ தனிநபராகவோ விண்ணப்பிக்கலாம்: தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களின் விருப்பத்திற்கேற்ப தனிப்பட்ட நபராகவோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரு குழுவாகவோ இணைந்து விண்ணப்பித்து பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் தொழில் வாய்ப்பு: வழக்கமான பணியைத் தாண்டி சுயசார்புடன் கூடிய வருவாய் ஈட்டும் சிறு தொழில் அல்லது பிற மாற்றுத் தொழில்களைத் தொடங்குவதற்கு இது அடித்தளமாக அமையும்.
'ஏற்றம்' திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகள்
இத்திட்டத்தின் பலன்களைப் பெற பயனாளிகளுக்குச் சில குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
வருமான வரம்பு: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு (மூன்று லட்சம் ரூபாய்) மிகாமல் இருக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள்: தூய்மைப் பணியாளர் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முழுத் தகுதி உடையவர்கள் ஆவர்.
தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் பல்வேறு சேவைகள்
தமிழ்நாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கல்வி, சமூக, வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு மேம்பாட்டிற்காக ஏற்கனவே தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது அவற்றோடு கூடுதலாக, பொருளாதார ரீதியாக குடும்பங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும் வகையில் 'ஏற்றம்' திட்டமும் இணைக்கப்பட்டிருப்பது அடித்தட்டு தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. சுயதொழில் மூலம் நிரந்தர வாழ்வாதாரத்தை உருவாக்க அரசு மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.