ரூ.7.50 லட்சம் வரை கடன் வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறலாம்? கல்லூரியில் சேர செம சான்ஸ்
TN Govt Education Loan Scheme: தமிழக அரசு உயர்கல்வி படிப்பிற்காக ரூ.7.50 லட்சம் வரை பிணையம் இல்லாத கல்விக்கடனை வழங்குகிறது. எனவே, 10,12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர கடன் பெறலாம். இதனை எப்படி பெறலாம் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.
TN Govt Loan Scheme: தமிழக அரசு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, பட்டப்படிப்பில் சேரும் வகையில், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு ரூ.7.50 லட்சம் வரை பிணையம் இல்லாத கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ரூ.7.50 கல்விக்கடனை யாரெல்லாம் பெறலாம், எப்படி பெறலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ரூ.7.50 லட்சம் வரை கல்விக்கடன்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
இளநிலை, முதுநிலை, பொறியியல், மருத்துவம், செவிலியர், தொழில்நுட்பம், தொழில்முறை, திறன் மேம்பாட்டு படிப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கும் கல்விக் கடன் பெறலாம். கல்லூரிக் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம், நூலகம் மற்றும் ஆய்வகக் கட்டணம், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், பாடநெறிக்குத் தேவையான வெளிநாட்டில் கல்வி மடிக்கணினி, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் பயில்வோருக்கான உள்ளிட்டவற்றுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
கடன் பெற தகுதியானவர்கள் யார்?
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை முடித்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகள், தங்களது கல்விச் செலவுகளுக்காக வங்கிகளின் கல்விக் கடன் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வட்டி விகிதம் என்ன?
கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் நடைமுறைகளின்படி நிர்ணயிக்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் மத்திய அரசின் வட்டி மானியத் திட்டங்களையும், மாணவியர்களுக்கான சிறப்பு வட்டி சலுகைகளையும் பெறலாம்.
படிப்பு முடிந்து மொரட்டோரியம் (வங்கிகளில் வழங்கப்பட்ட கால அவகாசம்) காலம் நிறைவடைந்த பிறகு, மாதாந்திர தவணை (EMI) முறையில் கடனை திருப்பிச் செலுத்தலாம். கடன் தொகையைப் பொறுத்து அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.7.50 லட்சம் வரை கல்விக் கடன் பெறும் தகுதியுள்ள மாணவர்கள், உரிய வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிணையம் (Collateral) இல்லாமல் கல்விக் கடன் பெறும் வசதியும் உள்ளது.
உயர்கல்வி கடன் பெறுவது எப்படி?
ரூ.7.50 லட்சம் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது PM Vidyalaxmi Portal (https://pmvidyalaxmi.co.in) இணையதளத்தில் பதிவு செய்து கல்விக் கடன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி (Lead Bank) மற்றும் அருகிலுள்ள வங்கிக் கிளைகளை அணுகி பயன்பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மாணவர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் ஆதார் அட்டை, PAN அட்டை, புகைப்படம், முகவரிச் சான்று, வருமானச் சான்று, கல்லூரி சேர்க்கைக் கடிதம், முழு படிப்பிற்கான கட்டண விவரம், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மற்றும் பிற கல்விச் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவைப்பட்டால்), கலந்தாய்வு (Counselling) அல்லது மெரிட் (Merit) சேர்க்கைச் சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.