தமிழக ஜிஎஸ்டி வருவாய் சர்ச்சை: திமுகவின் குற்றச்சாட்டும் தவெக அரசின் விளக்கமும் Explained
2026 அக்டோபர் ஜிஎஸ்டி வசூல் 3.2% மட்டுமே என திமுக விமர்சித்துள்ள நிலையில், வரிப் பங்கீட்டிற்கு பின் வருவாய் 8% அதிகரித்துள்ளதாக தவெக அரசு விளக்கம் அளித்துள்ளது. பின்னணி மற்றும் புள்ளிவிவரங்கள் இதோ...
தமிழ்நாடு அரசியல் பரப்பில் தற்போது விவாதப் பொருளாக மாறியிருப்பது ஜிஎஸ்டி வரி வருவாய்தான். 2026 அக்டோபர் மாதத்தில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது என பிரதான எதிர்கட்சியான திமுக விமர்சித்துள்ளது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளதாக ஆளும் தவெக அரசு விளக்கம் அளிக்கிறது. இந்த விவாதத்தின் பின்னணி என்ன?, திமுக சொல்வது என்ன? தவெக விளக்கம் என்ன? புள்ளிவிவரங்களுடன் இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | உயரப்போகும் பால் விலை? லிட்டருக்கு ரூ.5 உயர்வா? ஆவின் நிர்வாகம் எடுத்த முடிவு!
திமுகவின் விமர்சனம்
- அக்டோபர் மாத ஜிஎஸ்டி புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
- முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி என்பது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.
- அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி மூன்று சதவீதம் மட்டுமே சுட்டுக்காட்டிய தங்கம் தென்னரசு, இதே காலகட்டத்தில் தெலங்கானாவில் 14%, கர்நாடகாவில் 18%, கேரளா 23%, ஆந்திரா 24% வளர்ச்சி பதிவாகி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
- மேலும், தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சியை வலுப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தவெக அரசின் பதில் என்ன?
- திமுகவின் விமர்சனத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார். அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி எதிர்மறை (Negative) நிலையில் இருந்து நேர்மறையாக (Positive) 3.2% ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
- மத்திய அரசு உடனான வரிப் பங்கீட்டுக் கணக்கீடுகளக்குப் பிறகு தமிழகத்திற்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் அக்டோபரில் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
- நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வருவாய், வரிப் பங்கீட்டுக்குப் பிறகு 15% வளர்ச்சி அடைந்துள்ளதாக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி. லோகேஷ் தமிழ்செல்வனும் தெரிவித்திருந்தார்.
- அதாவது, மொத்த ஜிஎஸ்டி வசூலை மட்டும் வைத்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மதிப்பிட முடியாது என்பதே அரசின் வாதமாகும்.
Gross GST, Post Settlement GST என்றால் என்ன?
திமுக விமர்சனத்தையும், தவெக விளக்கத்தையும் புரிந்துகொள்ள முதில், மொத்த ஜிஎஸ்டி (Gross GST), வரிப் பங்கீட்டுக்கு பிறகான ஜிஎஸ்டி வருவாய் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
Gross GST: மாநிலத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாயே இது. இதில் மாநில ஜிஎஸ்டி (SGST), மத்திய ஜிஎஸ்டி (CGST), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) ஆகியவை அடங்கும்.
Post-Settlement GST: மாநிலத்திற்குச் சொந்தமாகக் கிடைக்கும் SGST வருவாய் உடன், மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் IGST பங்கீட்டையும் கணக்கில் கொண்ட வருவாயே இது.
IGST என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது இல்லை. மத்திய அரசின் வரி பங்கீட்டுச் செயல்முறைக்கு பிறகே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான தொகை ஒதுக்கப்படுகிறது.
எனவே, மொத்த வசூல் வளர்ச்சியும் மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாய் வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் படிக்க | டாஸ்மாக் முக்கிய அறிவிப்பு! FL2 லைசென்ஸ் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
- கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ரூ.11,298 கோடியாகும்.
- அதுவே, 2026 அக்டோபர் மாதத்தில் இது ரூ.11,661 கோடியாக அதிகரித்துள்ளது.
- அதாவது ஓராண்டில் ரூ.363 கோடி உயர்ந்துள்ளது, வளர்ச்சி விகிதம் சுமார் 3.2% ஆகும்.
- இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 2026 அக்டோபரில் 22.9% அதிகரித்து ரூ.2.31 கோடியை எட்டியுள்ளது. ஆனால், தேசிய வளர்ச்சி விகிதத்தில் இறக்குமதி வருவாயின் அதிகரிப்பும் அடங்குகிறது.
- மாநிலங்களின் வளர்ச்சியை ஒப்பிடும்போது உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாயைக் கொண்டு ஒப்பிடுவதே பொருத்தமானதாக இருக்கும். அந்த கணக்கிலும் தமிழ்நாட்டின் 3.2% வளர்ச்சி என்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது...
அக்டபோர் மாதத்தில் மொத்த உள்நாட்டு GST வசூல் வளர்ச்சி 3.2% மட்டுமே என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் உறுதியாகிறது.
அதேநேரத்தில் தமிழக அரசின் தகவலின்படி, மத்திய அரசின் வரிப் பங்கீட்டுக்குப் பிறகு மாநிலத்திற்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் அக்டோபரில் 8% அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான இந்த காலகட்டத்தில் இந்த வளர்ச்சி 15% ஆக உள்ளது.
எனவே, திமுக சுட்டிக்காட்டும் மொத்த ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி குறைவு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதேசமயம், தவெக அரசு குறிப்பிடும் மாநிலத்திற்குக் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பும் கவனிக்கப்பட வேண்டியது.
ஆனால், ஒரு மாதத்தின் ஜிஎஸ்டி வசூலை மட்டும் வைத்து மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்க முடியாது. உற்பத்தி, முதலீடு, வேலைவாய்ப்பு, நுகர்வு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரக் குறியீடுகளையும், வருவாய் குறையீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மதிப்பிட முடியும்.
மேலும் படிக்க | பாட்டிலுக்கு ரூ.10 வசூல்.. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டமும், பின்னணியும்? Explained