நாட்டில் பெரும்பான்மையான இந்து மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை, தீபாவளி ஆகும். இருப்பினும், சாதி கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து தீபாவளி பண்டிகையை அனைவருமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பார்கள்.
குறிப்பாக தீபாவளி அன்றுதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். தீபாவளி சீசன் தொடங்கிவிட்டாலே தெருவில் வெடித்துச் சத்தம் கேட்க தொடங்கிவிடும்.
இந்நிலையில், ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், "பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 23 நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தன.
மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்" என தமிழ்நாடு அரசு உறுதிப்பட தெரிவித்துள்ளது.
பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. பாதிப்பு ஏதும் இல்லாமல் சுற்றுச்சூழலை பேணிக் காப்பது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது.