மதுரையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியதில் புதிதாக எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவு
1989ஆம் ஆண்டு அதற்கான தீவிரமான முயற்சி மேற்கொண்டோம். அதற்கு பிறகு அத்தகைய தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஒரு கனவு இருக்கும். காங்கிரஸ் கட்சியின் கனவு காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான்.
காங்கிரஸ் கட்சியிடம் செய்தியாளர்கள் வில்லங்கமான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அந்த கேள்விக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலளித்துள்ளார். இரண்டு அமைச்சர்கள் மட்டும் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று அவர் கூறவில்லை. காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் காங்கிரஸின் கனவு என்றுதான் அவர் கூறியுள்ளார்" என மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்தார்.
மேலும் டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, "டிடிவி தினகரனைப் பொறுத்தவரையில், அவர் சூழலுக்கு ஏற்ப பேசிக்கொண்டிருப்பார். திருமாவளவனைப் பொறுத்தவரையில், அவரை இவ்வளவு கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
திருமாவளவன் பாஜகவுடன் இணைந்து அமைச்சராவார் என்று நினைக்கிறீர்களா? பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளார். ஆனால், இவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்று டிடிவி தினகரன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
தவெகவுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் விட்டுக்கொடுத்துவிட்டதாகக் கூறப்படுவது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகப் பேசப்படும் கருத்து. இதையெல்லாம் நாங்கள் கடந்து வந்துவிட்டோம். தமிழகத்தில் பல்வேறு வழிகளில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக முயன்றது. தற்போது டிடிவி தினகரனைத் தன் பக்கம் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், பழனிசாமியும் தினகரனும் பாஜகவின் முயற்சிகளை நிராகரித்துள்ளனர்" என்றார்.
தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இதுகுறித்து அவர், "அண்ணாமலையை முன்னிறுத்தி பாஜக புதிய அரசியல் முயற்சியில் ஈடுபடுகிறது. கட்சியில் இருந்து வெளியேறி, தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற ஓர் அமைப்பை நடத்துவதுபோல் செயல்பட்டாலும், அவர் பேசும் கருத்துகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் நிலைப்பாட்டை ஒத்திருக்கின்றன.
அடுத்ததாக, ஒரு நடிகரைத் தயார்படுத்தி, டெல்லியில் ரசிகர்களைக் கூட்டி, அவரைக் கட்சி தொடங்க வைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. பழனிசாமியை மையமாகக் கொண்ட ஒரு திட்டம், அண்ணாமலையை மையமாகக் கொண்ட மற்றொரு திட்டம், புதிய நடிகரை (தனுஷ்) முன்னிறுத்தும் மூன்றாவது திட்டம் எனத் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக - ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கின்றன.
இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் டெல்லி உள்ளது. அமித்ஷாவிடம் இருந்து உருவாகும் இந்த அரசியல் நடவடிக்கையை 'Operation D' என்று குறிப்பிடலாம். தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே பாஜக இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு சினிமாவை மையமாகக் கொண்ட அரசியல் பாரம்பரியமாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற பாஜக முயற்சி செய்து வருகிறது. ரஜினிகாந்தைக் கட்சி தொடங்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது அரசியல் கட்சியாக உருவெடுக்கவில்லை.
அதிமுகவின் அரசியல் இடத்தைப் பிடிப்பதற்காகப் பாஜக - ஆர்எஸ்எஸ் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. எனவே, பத்திரிகையாளர்கள் இந்த அரசியல் நடவடிக்கைகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம்" என்றார்.