SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு, வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகள் காரணமாக தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2027 மார்ச் மாதத்திற்கு பிறகே நடைபெற வாய்ப்புள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Written By R Balaji
Published: Nov 11, 2026, 03:51 PM IST | Updated: Nov 11, 2026, 03:54 PM IST
Join

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இதுவரை அறிவிக்கப்படாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தும், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் ஏன் மேற்கொள்ளவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு விளக்கமளித்த தமிழக அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னரே வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும், இந்த நடைமுறைகள் முடிவடைந்த பிறகுதான் தேர்தலை அறிவிக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பால் ஏற்பட்ட தாமதம்!

நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, 2026 ஜனவரி முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2027 ஆம் ஆண்டில்தான் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் கிடைத்த பின்னரே உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்வது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அதுவரை தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தேர்தல் கிடையாதா?

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த பின்னர், உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்ய 120 நாட்கள் தேவைப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை இறுதி செய்ய 30 நாட்களும், தேர்தலுக்கு முந்தைய நடைமுறைகளை நிறைவு செய்ய 90 நாட்களும் தேவைப்படும் என கூறியுள்ளது. இப்படி அனைத்து நடைமுறைகளையும் முடிக்க மொத்தம் 240 நாட்கள் ஆகும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தின் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி பாஸ்க்ரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்தல் நடத்துவதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, 28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வரும் சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு அதாவது 2027 ஏப்ரல் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகள் முடிவடைய வேண்டியிருப்பதால், 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உள்ளாட்சித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு மேலும் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES