Tamil Nadu solar panel subsidy scheme : வீட்டு மாடிகளில் சோலார் பேனல்கள் (சூரியமின் தகடு) அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் புதிய திட்டத்திற்கான இணையதள முன்பதிவு சேவை வரும் 21-ஆம் தேதி சென்னையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மத்திய அரசின் 'பிரதான் மந்திரி சூர்யாகர் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடுகளின் மேற்கூரையில் சோலார் மின்சக்தி உற்பத்தி வசதிகள் நிறுவப்படுகின்றன. சாமானிய மக்களின் மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைப்பது, மாசற்ற பசுமை மின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மின் நுகர்வோர் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சோலார் அமைப்புகளின் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப மத்திய அரசும், அதற்கு கூடுதலாக மாநில அரசும் மானியத்தை அறிவித்துள்ளன:
1 கிலோவாட்: மத்திய அரசு மானியம் ரூ.30,000; மாநில அரசு கூடுதல் மானியம் ரூ.5,000.
2 கிலோவாட்: மத்திய அரசு மானியம் ரூ.60,000; மாநில அரசு கூடுதல் மானியம் ரூ.10,000.
3 கிலோவாட்: மத்திய அரசு மானியம் ரூ.78,000; மாநில அரசு கூடுதல் மானியம் ரூ.22,000.
இதன் மூலம் 3 கிலோவாட் சோலார் பேனல் அமைப்போருக்கு அதிகபட்சமாக மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் (சூரியமின் தகடு) அமைப்பதற்கான உத்தேசச் செலவு விவரங்கள் அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இதில் ஆரம்பக்கட்ட அமைப்பாகக் கருதப்படும் 1 கிலோவாட் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் அமைப்பை நிறுவ தோராயமாக ரூ. 70,000 முதல் ரூ. 90,000 வரை செலவாகும்.
நடுத்தரத் தேவைகளுக்கான 3 கிலோவாட் உற்பத்தித் திறனுக்கு ரூ. 1.8 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரையிலும், சற்றே கூடுதல் மின்தேவை கொண்ட வீடுகளுக்கான 5 கிலோவாட் வசதிக்கு ரூ. 2.8 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையிலும் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான வீடுகள் மற்றும் அதிக பயன்பாட்டைக் கொண்ட தேவைகளுக்காக 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அமைப்புகளை நிறுவ ரூ. 5 லட்சம் மற்றும் அதற்கு மேல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்படும் 1 கிலோவாட் சூரியமின் தகடு மூலமாக நாளொன்றுக்கு சராசரியாக 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதன்மூலம் மாதாந்திர மின் கட்டணத்தில் கணிசமான தொகையைச் சேமிக்க முடிவதுடன், ஆரம்பக்கட்ட முதலீட்டுத் தொகையைச் சில ஆண்டுகளிலேயே ஈடுசெய்துவிட முடியும். பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வங்கிகள் வாயிலாக உடனடி கடன் வசதிகளும் எளிதாக வழங்கப்படுகின்றன.
சோலார் பேனல் பொருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 7 முதல் 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்கான இணையதளச் சேவையை வரும் 21-ஆம் தேதி சென்னையில் முறைப்படி அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைக்கிறார்.