ஆடு மேய்ப்பவருக்கு ரூ.10,451 கரண்ட் பில்... என்ன பிரச்னை? யார் மீது தவறு? Explained
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி ராஜேந்திரனுக்கு 10,451 மின்கட்டணம் வந்த விவகாரத்தில், மின்சார வாரியம் ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த சில மாதங்களாகவே மின்சாரம் குறித்த பேச்சுதான் அனைத்து பக்கமும் இருக்கிறது. மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, மின்சார தட்டுப்பாடு, மின் கொள்முதல் என தொடர்ச்சியாக மின்சாரத்துறை தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டில் 10,451 ரூபாய் மின் கட்டணம் வந்திருக்கிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து தொழிலாளி அளித்த புகார் ஊடகங்களிடம் செய்தியாக வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
ஷாக் கொடுத்த மின் கட்டணம்
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் (51). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு கடந்த காலங்களில் மிக சொற்பமான அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது. கடந்த மாதம் கூட அவருக்கு ரூ.700 கட்டணம் வந்துள்ளது. உடனே அவர் புகார் அளித்துள்ளார்.
அந்த வகையில், கடந்த மாத மின் கட்டணத்தொகை 10,451 ரூபாய் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாக மின் கட்டணம் வந்ததை தொடர்ந்து அவரால் அந்த கட்டணத்தை செலுத்த இயலவில்லை. மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் அவரது இணைப்பும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ராஜேந்திரன் சொல்வது என்ன?
ஊடகங்களிடம் ராஜேந்திரன் கூறியதாவது, "நான் இப்போதுகுடியிருக்கும் வீட்டில் 50 வருடமாக நான் வசித்து வருகிறேன். என் வீட்டில் தொலைக்காட்சியும், மின்விசிறியும் மட்டுமே உள்ளது. கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் ஏதுமில்லை.
நான் வீட்டுக்கு சென்ற முறை 710 ரூபாய் மின் கட்டணமாக வந்தது. உடனே சென்று புகார் அளித்தேன். ஆய்வு செய்ய வருகிறேன் என சொன்னார்கள், ஆனால் வரவில்லை.
இந்த முறை ரூ.10,500 கட்டணம் என கூறினார்கள். எனக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டுவதற்கான தகுதி இல்லை. அதனால் 20 நாட்களுக்கு முன் மின் இணைப்பை துண்டிவிட்டு சென்றார்கள்.
எனது மகன் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து வருகிறார். வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் அவரால் செமஸ்டர் தேர்வுக்கு கூட படிக்க வழியில்லாமல், தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து வருகிறார். நாங்களும் எங்களது வீட்டில் வாழ முடியாமல் ஆட்டு கொட்டகையில் படுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேணடும். எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். எனவே, வீட்டிற்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
புகார்தாரர் சந்தித்த பிரச்னை
| ஜூலை, 2026 | ரூ.710 |
| செப்டம்பர், 2026 | ரூ.10,415 |
| செப்டம்பர், 2026 | மின் கட்டணம் செலுத்தவில்லை |
| செப்டம்பர் 24 | மின் சேவை துண்டிப்பு |
ஆய்வு செய்த மின்சார வாரியம்
இதுகுறித்து பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட சூழலில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் முறையிடப்பட்டது. மின் கட்டணம் தொடர்பான புகார் ஆய்வு செய்யப்பட்டு, மின் அளவீடுகள் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, மின் கட்டணம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அளித்த விளக்க குறிப்பில், "விருதுநகர் மின் பகிர்மான வட்டம், திருவில்லிபுத்துார் கோட்டம், ஊரகம் உபகோட்டம், மல்லிப்புதுார் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்திடும் தொழிலாளி வீட்டிற்கு செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ.10,451 கணக்கிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அது குறித்து புகார் செய்தும், மின் கட்டணத்தை செலுத்தக் கோரியதால், மின் கட்டணம் செலுத்த இயலாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு அறிக்கை சமர்பிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அளிக்கப்பட்ட விளக்கம்
- திருவில்லிபுத்துார், இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இராஜேந்திரன் என்பவரது வீட்டு மின் இணைப்பில் கடந்த ஜூலை மாதம் 700 ரூபாய் மின் கட்டணம் வந்ததை தொடர்ந்து மின் வாரிய அலுவலர்களால் ஜூலை 31ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆகிய தினங்களில் மின் அளவி ஆய்வு செய்யப்பட்டு Check Reading-ம் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆய்வில் மின் அளவி நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- மீண்டும் செப்டம்பர் மாதம் மின் கட்டணம் ரூ.10 ஆயிரத்து 451 ஆக பதிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி அன்று மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டது.
- கள ஆய்வில், இராஜேந்திரன் வீட்டில் Air Cooler உபயோகத்தில் இருந்ததாலும், கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் 2024ஆம் ஆண்டு நவம்பர் ஆகிய காலகட்டங்களிலும் இதே அளவு பயன்பாடு இருந்துள்ளது குறித்தும் இராஜேந்திரனிடம் எடுத்துரைத்த போது அதனை ஏற்றுக்கொண்டு தான் 10 தினங்களில் மின் கட்டணம் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார்.
- ஆனால், மின்கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தாததால் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அன்று மின் துண்டிப்பு செய்யப்பட்டது.
- இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மின் அளவியின் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், கணக்கீட்டாளர் கடந்த 12 மாதங்களாக மின் அளவை குறைத்து தவறாக பதிவு செய்ததன் காரணமாகவும், சிறப்பு ஆய்வில் சரியான மின் அளவு பதிவு செய்யப்பட்டதன் காரணமாகவும், செப்டம்பர் மாதத்தில் ரூ.10,451 மின் கட்டணம் கணக்கீடாகியுள்ளது.
- எனவே, மின் அளவி ஆய்வாக அறிக்கையின் (CMRI தரவிறக்கம்) அடிப்படையில், மின் கட்டணம் திருத்தப்பட்டு தற்போது நிலுவைத்தொகையாக ரூ.4054 என கணக்கிடப்பட்டுள்ளது. தவறு செய்த மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- இராஜேந்திரன் திருத்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தியதை தொடர்ந்து, இன்று (அக். 14) மறு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | திமுக அரசின் மிகப்பெரிய 'கிரிமினல் வேஸ்ட்...' அமைச்சர் சிடிஆர் சொல்வது என்ன?