SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டாஸ்மாக் அதிரடி முடிவு: மதுபான கிளப்புகளுக்கான மானியம் ரத்து – நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றம்

TASMAC latest update : சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான ஸ்டார் கிளப்களுக்கு செக். ரீடெயில் கடை விலையிலேயே இனி மதுபானங்கள், கிடைக்கும் டாஸ்மாக் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 31, 2026, 08:44 AM IST | Updated: Oct 31, 2026, 08:55 AM IST
Join

TASMAC latest update : தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தனியார் கிளப்புகளுக்கு வழங்கி வந்த சலுகை விலையை ரத்து செய்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து மேலாண்மை இயக்குநர் அனைத்து மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.  

இதுவரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் செயல்பட்டு வரும் உயர்ரக கிளப்கள், டாஸ்மாக் மொத்த விற்பனை டிப்போக்களில் இருந்து மதுபானங்களை வாங்கும்போது, பொதுமக்களுக்கான சில்லறை விற்பனைக் கடைகளை விடக் குறைவான விலையில் பெற்று வந்தன. இந்த மறைமுக சலுகை அல்லது மானிய முறை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.

224-வது இயக்குநர் குழுக் கூட்டம்: வருவாய் பெருக்க முக்கிய முடிவு

டாஸ்மாக் நிறுவனத்தின் 224வது இயக்குநர் குழுக் கூட்டம் கடந்த 29.09.2026 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவாக, டாஸ்மாக் மொத்த விற்பனை டிப்போக்களில் இருந்து FL2 உரிமம் பெற்ற கிளப்கள் வாங்கும் மதுபானங்களின் கொள்முதல் விலையை, சில்லறை விற்பனைக் கடைகளின் கொள்முதல் விலைக்கு இணையாக உயர்த்த ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், கிளப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த தனி சலுகை முழுமையாக நிறுத்தப்பட்டு, சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இணையான விலையே கிளப்புகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

நவம்பர் 1 முதல் பாட்டிலுக்கு ரூ.10 செஸ் வரி அமல்

இச்சலுகை ரத்துடன் கூடுதலாக, தமிழக அரசு அண்மையில் அறிவித்த புதிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல செஸ் வரியும் இணைகிறது. வணிக வரி மற்றும் பதிவுத் துறை பிறப்பித்த அரசாணைகளின்படி, மனித பயன்பாட்டுக்கான அனைத்து வகையான மதுபானங்களுக்கும் ஒரு கொள்கலனுக்கு ரூ.10 செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.  

இதன் விளைவாக, 2026 நவம்பர் 1 முதல் சில்லறை விற்பனைக் கடைகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை மற்றும் FL2, FL3 (ஹோட்டல்கள்/பார்கள்) உரிமதாரர்களுக்கான கொள்முதல் விலை ஆகியவை பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தப்படுகிறது. அனைத்து உள்நாட்டு மதுபானங்கள் (IMFS), பீர், ஒயின், டிராஃப்ட் பீர் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி மதுபானங்கள் என அனைத்து அளவுகளுக்கும் இந்த ரூ.10 உயர்வு நேரடியாகப் பொருந்தும்.  

புதிய MRP லேபிள் அச்சிட உற்பத்தியாளர்களுக்கு உத்தரவு

விலை மாற்றத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிமாநில மதுபான உற்பத்தியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:  

மதுபான பாட்டில்களில் உள்ள பிராண்ட் லேபிள்களில் "MRP என்று தெளிவாக அச்சிடப்பட வேண்டும்.  

வடிசாலைகள், ஒயின் ஆலைகள், டாஸ்மாக் மொத்த விற்பனை டிப்போக்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் கையிருப்பில் உள்ள அனைத்து பாட்டில்களிலும் திருத்தப்பட்ட புதிய MRP லேபிள்களை உடனடியாக ஒட்ட வேண்டும்.  

2026 நவம்பர் 1 முதல் விநியோகிக்கப்படும் அனைத்து மதுபான பாட்டில்களிலும் இந்த திருத்தப்பட்ட புதிய விலை லேபிள்கள் கட்டாயம் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  

கிளப் வாடிக்கையாளர்களுக்கு பில் எகிறும்

இந்த புதிய உத்தரவுகளால், சென்னை ஜிம்கானா, மெட்ராஸ் கிளப், கோவை காஸ்மோபாலிடன் கிளப், மதுரை தமுக்கம் கிளப் உள்ளிட்ட முன்னணி கிளப்களில் மது அருந்துபவர்களுக்கான பில் தொகை கணிசமாக உயரவுள்ளது. இதுவரை சலுகை விலையில் மதுபானங்களைப் பெற்று வந்த கிளப் நிர்வாகங்கள், இனி கூடுதல் விலை மற்றும் செஸ் வரியைச் சேர்த்து நுகர்வோரிடமிருந்தே வசூலிக்கும் என்பதால் உயர்வகுப்பு கிளப் நுகர்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதே வேளையில், இந்த நடவடிக்கைகளின் வாயிலாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES