Thiruvarur Latest News: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள கச்சேரி சாலையை சேர்ந்தவர் கோபிநாத். இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 3 வயதில் ஷர்வின் என்ற மகன் உள்ளார்.
ஷர்வின் திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் Pre KG படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது மாணவன் உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெற்றோர் குழந்தையிடம் கேட்டபோது, ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணியாற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளியில் விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை என மறுத்த பள்ளி நிர்வாகத்தினரிடம் சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என பெற்றோர் கேட்டுள்ளனர்.
வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சியை குழந்தையின் தந்தை கோபிநாத் பார்த்தபோது குழந்தையின் கைகளை கட்டி, குழந்தையை பேனருக்குள் வைத்து ஊழியர் தாக்கும் காட்சிகளை பார்த்துள்ளார். இதனைப்பார்த்து அரண்டு போன அவர் அந்த வீடியோவை தனது போனில் ரெக்கார்ட் செய்துகொண்டார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை புகார் மனு அளிக்க முடிவெடுத்த நிலையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த மாதம் இதே பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவன் பள்ளி நிர்வாகத்தினரின் தொடர் தொந்தரவு மற்றும் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை புகார் மனு அளித்துள்ளார் .
புகாரைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் ஆயாம்மா வேலை செய்யும் செல்வி ஆகிய இருவர் மீதும் ஐந்து பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பள்ளியில் மாணவனை கொடூரமாக ஊழியர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.