Tiruvannamalai Temple Latest News: தமிழகத்தில் அறநிலையத்தறை கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள் செயல்பட்டு வருகிறது. சமீப நாட்களில் அறநிலையத்துறை கோயில் தரிசனத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை கோயில் தரிசனத்தில் சில அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. அதாவது, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், எப்போதுமே திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக, பௌர்ணமி நாளன்று பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். மேலும், 14 கி.மீட்டருக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். பக்தர்களுக்கு திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலகபிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்குள் எதிர்வரும் 01.09.2026 அன்று முதல் செல்போன்கள் இத்திருக்கோயிலுக்குள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.
இத்தகவல் குறித்து இத்திருக்கோயில் மூலம் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வருகைபுரியும் பக்தர்கள் 01.09.2026 அன்று முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் (அலைபேசி) எடுத்து செல்வது தடைவிதிக்கப்படவுள்ளதால், செல்போன் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச்செல்ல ஏதுவாக, திருக்கோயிலின் கிழக்கு இராஜகோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை (அலைபேசிகளை) ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு, டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சுவாமி-அம்மன் தரிசனம் முடிவுற்று திரும்பியவுடன் டோக்கன் காண்பித்து செல்போன்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த உத்தரவினை மீறி திருக்கோயிலுக்குள் மறைமுகமாக எடுத்துச்செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு. காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருக்கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அறநிலையத்தில் விஐபி தரிசனத்தில் சில மாற்றங்களை செய்து இருக்கிறது. இந்த மாற்றம் திருவண்ணாமலை அண்ணாமலையோர் கோயிலுக்கும் பொருந்தும். எனவே, திருவண்ணாமலை கோயிலுக்கு விஐபி தரிசனத்திற்கு வருவோர் கீழ்கண்ட விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி, பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கோயிலில் விஐபிக்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்.கோயில்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் வருகை குறித்து ஒருநாள் முன்னதாகவே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
முக்கியப் பிரமுகர்களை கோயில் வளாகத்தினுள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி தரக்கூடாது. விஐபிக்கள் வருகையின்போது கோயிலின் புனிதத்தன்மை, மரபுசார்ந்த விஷயங்கள் பாதிக்கக்கூடாது. விஐபிக்களின் வருகை குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற அறநிலையத் துறை உத்தரவிட்டிருக்கிறது.