SC, ST மாணவர்களுக்கு ரூ.30.24 கோடி விடுவிப்பு... ஸ்டாலின் குற்றச்சாட்டு - தமிழ்நாடு அரசு விளக்கம்
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் 2026-27 கல்வியாண்டிற்கான தற்போதைய நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தற்போது மொத்தம் 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
201 மாணவர்கள் இன்னும் சேரவில்லை
அதில் இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர் என்றும்; மீதமுள்ள 201 மாணவர்கள் 2027ஆம் ஆண்டு ஜனவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் சேர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.30.24 கோடி உதவித்தொகை விடுவிப்பு
பல்கலைக்கழகங்களில் சேர்ந்த 165 மாணவர்களில் 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழகக் நிதிகேட்பு விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர் என்றும் இவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்காத 25 மாணவர்கள்
மீதம் 56 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 25 மாணவர்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வெளிநாடு புறப்படும் முன் விசா, விமானக் கட்டணம் மற்றும் கல்விக்கட்டண முன்பணம் போன்ற ஆரம்பச் செலவுகளைச் சமாளிக்க உதவுவதாக தமிழ்நாடு அரசு அதன் விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
சிறப்புக் கல்விக் கடன் வழங்கல்
இதற்காக, நடப்பு ஆண்டில் தேர்வான மாணவர்களுக்கு தாட்கோ (TAHDCO) மூலம் 116 மாணவர்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அண்ணல் அம்பேத்கர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் இருந்து தாட்கோவிற்கு ஈடுசெய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை வழங்கும் முறை குறித்தும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- கல்விக் கட்டணம் பல்கலைக்கழகக் கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது.
- மொத்த 36 லட்சம் ரூபாய் வரம்பை மீறாத மீதமுள்ள தொகை (விமானக் கட்டணம், விடுதிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட செலவுகள்) மாணவர் கணக்கிற்கு விடுவிக்கப்படுகிறது.
- அனைத்து உதவித்தொகைகளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பிரத்யேக இணையதளம் மற்றும் மாணவர்களுக்கான விளக்கங்களுக்கான மின்னஞ்சல்
- பிரத்யேக வாயிலாக செயலாக்கப்படுகின்றன.
- மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை.
நாளிதழில் வெளியான செய்தி
முன்னதாக, இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தாமதமாகி உள்ளது என்றும் இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக அறிய வந்ததாக Times of India நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
குறிப்பாக, பல மாதங்களாக நிதி விடுவிக்கப்படாததால் மாணவர்கள் கல்விக் கட்டணம் மற்றும் வாடகை கூட செலுத்த முடியாமல் தவிப்பதாக்வும், பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்து அதிக வட்டிக்கு கடன் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்டாலின் கண்டனம்
இதையொட்டி முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், "உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?" என அவரது X பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளதாக ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
கடந்த திமுக அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் தவெக அரசுக்கு ஏன் இத்தனை வெறி என்றும் துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கும், முன்வைத்த குற்றச்சாட்டுக்கும் தமிழ்நாடு அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது
மேலும் படிக்க | கடும் கோபத்தில் சீக்கியர்கள்.. சோனியா காந்தியின் புத்தகம் எரிப்பு.. நடந்தது என்ன?