SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிர்ச்சி தகவல்! அவசியமில்லா அரசு பணிகள் விரைவில் ரத்து

TNPSC latest news : தமிழ்நாட்டில் விரைவில் அவசியமில்லா அரசுப் பணியிடங்களை முழுமையாக ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், இது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு எந்த வகையிலாவது பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 04, 2026, 04:38 PM IST | Updated: Oct 04, 2026, 04:49 PM IST
Join

TNPSC latest news : தமிழகத்தில் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையிலும், செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு துறைகளில் உள்ள தேவையற்ற அரசுப் பணியிடங்களை ரத்து செய்யவும், உயர் அதிகாரிகளின் பதவிகளைச் சீரமைத்துக் குறைக்கவும் அரசு தீவிர முடிவெடுத்துள்ளது. பல துறைகளில் அவசியமான மற்றும் அவசியமில்லாத பணியிடங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, வணிக வரித் துறையில் உள்ள கூடுதல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்கள் பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | வெற்றி மகளிர் கடன் திட்டம்: ரூ.5 கோடி வரை கடனுதவி.. யாருக்கெல்லாம்? எப்படி பெறுவது? Explained

அரசின் நிதி நிலைமை குறித்த கணக்கீட்டின்படி, தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் மானியங்கள் வாயிலாக 3.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மொத்த செலவினம் 4.05 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அரசுப் பணியாளர்களுக்கான சம்பளச் செலவு மட்டுமே 77,310 கோடி ரூபாயாகவும், கடன்களுக்கான வட்டி 76,452 கோடி ரூபாயாகவும், மக்கள் நல மானியங்களுக்கான பங்கு 1.72 லட்சம் கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளான 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் போன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்த அதிக நிதி தேவைப்படுவதால், இந்தச் செலவினச் சீரமைப்பு மற்றும் பணியிடக் குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன?

அரசு நிர்வாகச் செலவுகளைக் குறைக்கப் பணியிடங்களை ரத்து செய்யும் இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக இரவு பகலாக உழைத்து அரசுப் பணிக்காகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசுப் போட்டித் தேர்வு மாணவர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வர்களுக்கு ஏற்படக்கூடிய நேரடி மற்றும் மறைமுகப் பாதிப்புகள்:

1. மிக மிக குறைவான காலிப்பணியிடங்கள்

ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் வருடாந்திரத் தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 பணிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்கனவே ஆயிரக்கணக்கிலிருந்து நூற்றுக்கணக்காகக் குறைந்து வருகிறது. தற்போது அவசியமில்லாத பணியிடங்கள் எனக் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்படும் பட்சத்தில், துறைகளில் இருந்து டிஎன்பிஎஸ்சிக்கு அனுப்பப்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்குச் சரியும் அபாயம் உள்ளது. இதனால் போட்டி பல மடங்கு கடினமாகும்.

2. உயர் அதிகாரிகள் பதவிக்குறைப்பு

வணிக வரித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் போன்ற உயர் பதவிகள் குறைக்கப்படும்போது, அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைப்பதில் தேக்கம் ஏற்படும். உயர் மட்டத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெற்றுச் செல்லாதவரை, அடிமட்டத்தில் உள்ள குரூப் 1, குரூப் 2 மூலமாக நிரப்பப்படும் நேரடி நியமனப் பணியிடங்கள் காலியாகாது. இதனால் புதிய அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகும் சூழல் உருவாகும்.  

3. தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணி முறைக்கு வழிவகுக்கும் அபாயம்

நிரந்தரப் பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதால், நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி நடத்த அரசு மாற்று வழிகளை நாடக்கூடும். குறிப்பாக, கடந்த காலங்களில் விவாதிக்கப்பட்ட மனிதவளக் கழகம் வழியாகத் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் நடைமுறைக்கு இது வழிவகுக்கலாம். இதனால், டிஎன்பிஎஸ்சி மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வெழுதி நிரந்தரப் பணிக்குச் செல்லும் நடைமுறை படிப்படியாக முடக்கப்படும் நிலை ஏற்படலாம்.

4. தேர்வர்களின் வாழ்க்கை கேள்விக்குறி

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களில் பெரும்பாலோர் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற, நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவர். டிகிரி முடித்துவிட்டு 3 முதல் 5 ஆண்டுகள் வரை பயிற்சி மையங்களிலும் நூலகங்களிலும் தங்கி லட்சக்கணக்கில் செலவழித்துப் படித்து வருகின்றனர். பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுத் தேர்வுகள் தள்ளிப்போனால், பலருக்கு உச்ச வயது வரம்பு கடந்துபோய், அவர்களின் பல ஆண்டு உழைப்பும் தியாகமும் வீணாகிவிடும்.

5. குரூப் 4 அடிமட்டப் பணியிடங்கள் நீக்கப்படும் அபாயம்

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கணினிப் பயன்பாடு அதிகரிப்பைக் காரணம் காட்டி, வகைப்படுத்தப்படாத கீழ்நிலை எழுத்தர், தட்டச்சர், பதிவறை எழுத்தர் போன்ற குரூப் 4 நிலைப் பணியிடங்கள் தேவையற்றவை எனக் கருதப்பட்டு முடக்கப்படலாம். லட்சக்கணக்கான எளிய கிராமப்புற இளைஞர்களுக்கு அரசுப் பணிக்குள் நுழைய இருக்கும் ஒரே வழியாகத் திகழும் குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் குறைந்தால், கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு முற்றிலும் கேள்விக்குறியாகும்.

6. Cut off மதிப்பெண் உயர்வு

பணியிடங்களின் எண்ணிக்கை சுருங்கும்போது, தேர்வுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் எட்ட முடியாத உயரத்திற்குச் செல்லும். நூறில் ஒரு வினா தவறானாலும் கூட வேலை பறிபோகும் சூழல் உருவாகும். இது மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சலையும், அரசுத் தேர்வுகளின் மீதான நம்பிக்கையின்மையையும், சோர்வையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | மதுரை இளைஞர்களே... அக். 10இல் வேலைவாய்ப்பு முகாம் - முன்பதிவு முக்கியம்

தேர்வர்களின் எதிர்பார்ப்பு

மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது அரசின் கடமை என்றாலும், அதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு அரசுப் பணியிடங்களைக் குறைப்பது சரியான தீர்வாகாது என்பதே போட்டித் தேர்வர்களின் வாதமாக உள்ளது. முறையான வரி வசூலைத் தீவிரப்படுத்துதல், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் வருவாயைப் பெருக்குதல் போன்ற வழிகளை நாட வேண்டுமே தவிர, இளைஞர்களின் ஒரே நம்பிக்கையான டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களைக் குறைப்பது தமிழகத்தின் இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க | 8ம் வகுப்பு படித்தவரா? ரூ.58,000 வரை சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES