டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 2, 2A Results : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்துள்ளார்.
TNPSC Group 2, 2A Results : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை இன்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நன்னடத்தை அலுவலர், துணை பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி மற்றும் மூத்த வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,647 தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளுடன் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது.
இன்று தேர்வு எழுதியோர் விகிதம்
இத்தேர்வை எழுத மாநிலம் முழுவதும் மொத்தம் 4,89,885 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விண்ணப்பதாரர்களில் ஆண்கள் 1,84,131 பேர், பெண்கள் 3,05,719 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 35 பேர் அடங்குவர். இன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில், அனுமதிக்கப்பட்டவர்களில் 3,97,293 தேர்வர்கள் நேரில் பங்கேற்று தேர்வு எழுதினர். சுமார் 92,595 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. ஒட்டுமொத்தமாக 81.10 சதவீத தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அமைக்கப்பட்டிருந்த 173 தேர்வு மையங்களில் 51,721 பேர், ஆண்கள் 22,384, பெண்கள் 29,333, மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு தேர்வு எழுதினர்.
தேர்வு நடைமுறை
முதல்நிலைத் தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கினாலும், காலை 7 மணி முதலே தேர்வர்கள் தங்களின் மையங்களுக்கு வரத் தொடங்கினர். நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் உரிய அடையாள ஆவணங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் வடிவில் 200 வினாக்களுடன் அமைந்திருந்தது. இதில் பொது அறிவுப் பிரிவில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் இருந்து 100 வினாக்களும் இடம்பெற்றன; ஒவ்வொரு வினாவிற்கும் ஒன்றரை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த தேர்வர்கள் வினாத்தாள் எளிமையாகவும், சீரான அளவிலும் இருந்ததாகக் கருத்து தெரிவித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு
தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வு மையங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் துணையுடன் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மாவட்டங்கள் தோறும் துணை ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புப் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தவிர வெளிநபர்கள் எவரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. மேலும், தேர்வர்கள் சிரமமின்றி மையங்களை வந்தடையும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
2 மாதங்களில் தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த தேர்வுக் கூடங்கள், தேர்வர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இத்தேர்வுக்கான முடிவுகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் துரிதமாக மதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இந்த முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியான தேர்வர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.