தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கட்சி தலைமை எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இரு தொகுதிகளிலும் எதிர்கட்சிகள் பெற்ற வாக்குகள், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தவெக தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் உடனடியாக போட்டியிடுவதற்கு பதிலாக, அதனை தள்ளிப்போடுவது குறித்து கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய திகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தாலும், தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சில முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்க சுற்றுகளில் அதிமுக முன்னிலையில் இருந்ததும், இறுதியில் தவெக சுமார் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் கவனத்தை பெற்றுள்ளது.
ஆளுங்கட்சியாக இருப்பதால் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளிட அம்சங்கள் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்த சூழலிலும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்றிருப்பது, தமிழக அரசியலில் அவற்றின் ஆதரவு தளத்தை மதிப்பிட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இரு தொகுதிகளிலும் திமுக 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. அதேஓல், கொங்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தனது ஆதரவை தக்கவைத்தும் இருக்கிறது. இவை தவெக எதிர்கால தேர்தல்களில் எதிர்கொள்ள வேண்டிய போட்டியின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
சட்டமன்ற இடத்தேர்தலுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலில் மாநில அளவிலான அரசியல் சூழல், தலைவர்களின் செல்வாக்கு, கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, உள்ளூர் பிரச்சினைகள், மக்களுடனான நேரடி தொடர்பு ஆகியவையே முடிவுகளை தீர்மானிக்கக்கூடும். இதனால், இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை மட்டும் அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சியின் பலத்தை முழுமையாக மதிப்பிட முடியாது.
ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் போட்டியிடுவதற்கு வலுவான உள்ளூர் நிர்வாகிகள், தேர்தல் பணியாளர்கள், வாக்குச்சாவடி அளவிலான அமைப்புகள் ஆகிய்வை அவசியமாகின்றன. திமுக, அதிமுக போன்ற நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட கட்சிகள் பல பகுதிகளில் ஏற்கனவே இத்தகைய அமைப்புகளை கொண்டுள்ளன.
புதிய அரசியல் கட்சியான தவெக மாநில அளவில் பெற்றுள்ள ஆதரவை உள்ளூர் அளவில் தேர்தல் வெற்றியாக மாற்ற வேண்டிய சவால் உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் பொருத்தமான வேட்பாளர்களை தேர்வு செய்வது, உள்ளூர் பிரச்சினைகளை அறிந்து செயல்படுவது, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது போன்றவை கட்சிக்கு முக்கியமான பணிகளாக இருக்கும். மேலும், உள்ளாட்சி தேர்தலில் ஏற்படும் வெற்றி அல்லது தோல்வி கட்சியின் அடிமட்ட அமைப்புகளின் வலிமையை மதிப்பிடுவதற்கான ஓர் அளவுகோலாகவும் உள்ளது. எனவே, இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள் குறித்து தவெக தலைமை கவனம் செலுத்த வ்ண்டியிருக்கும் என அரசியல் வட்டாரங்க்ளில் கருத்துகள் நிலவுகின்றன.
இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களின் பின்னணியில், உள்ளாட்சி தேர்தலில் உடனடியாக களம் இறங்காமல் இருப்பது குறித்து தவெக தலைமை ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேர்தலுக்கான அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், உள்ளூர் அளவில் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என்பதே இதற்கு கூறப்படும் காரணமாக உள்ளது. எனவே, உள்ளூர் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமல் தள்ளிப்போடுவதே சரியான முடிவாக இருக்கும் என்ற முடிவுக்கு முதலமைச்சர் விஜய் வந்துள்ளதாக கூறப்படுகிறது.