வி.எஸ். பாபு மறைவு: 'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - திருச்சி பயணத்தை ரத்து செய்த CM விஜய்
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என குறிப்பிட்டு வி.எஸ். பாபுவின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
VS Babu Passed Away, Political Leaders Condolences: தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவுக்கு ஆளுநர் ஆர். வி. அர்லேகர், முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் இரங்கல்
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் வெளியிட்ட இரங்கல் பதிவில், "கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் இரங்கல்
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்" என பதிவிட்டுள்ளார்.
வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து
மேலும், வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி, முதலமைச்சர் விஜய்யின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி செல்ல இருந்த நிலையில், அந்த பயணமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பதிவில், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.